Kangana Ranaut: முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸா? - கங்கனாவை கழுவி ஊற்றிய இணையவாசிகள்!
நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.
![Kangana Ranaut: முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸா? - கங்கனாவை கழுவி ஊற்றிய இணையவாசிகள்! Netizens trolled kangana ranaut says netaji subhash chandra bose was independent indias-first prime minister Kangana Ranaut: முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸா? - கங்கனாவை கழுவி ஊற்றிய இணையவாசிகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/15613d5afc10ad9b2a60054919403b5b1712286723305572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்திருப்பது கடும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் கடந்த இரண்டு வாரங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. தேசிய மற்றும் மாநில கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் விதவிதமாக பரப்புரையை வேட்பாளர்களும், தொண்டர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை கங்கனா ரனாவத் பேசிய கருத்துகள் இணையத்தில் கடும் கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அதில் பேசிய அவர், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்” என குறிப்பிட்டார்.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “பெரிய ஜோக்கர் கட்சியின் கோமாளிகள்.. இதெல்லாம் நியாயமா” என நக்கலாக தெரிவித்துள்ளார். அதேசமயம் இன்னொரு இணையவாசி, “ஒரு நிகழ்ச்சியில் தேசிய ஊடகத்தில் ஆலியா பட் இப்படி பேசிய போது அவருக்கு வயது 19 என சொன்னார்கள். ஆனால் 40 வயதை தாண்டிய தன்னை ஒரு தேசியவாதி என காட்டிக் கொள்ளும் கங்கனா ரனாவத் தான் இந்த ஆண்டின் சிறந்த மேதை” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவர், “சில ஆண்டுகளுக்கு முன்பு, 2014ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கங்கனா ரனாவத் கூறினார். இப்போது சுபாஷ் சந்திரபோஸ் தான் இந்தியாவின் முதல் பிரதமர் என்று கூறுகிறார். வரலாற்றை மாற்றுவது அபத்தம்” என கூறியுள்ளார்.
உண்மை நிலவரம் என்ன?
இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களில் மிக முக்கியமானவர் சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய காங்கிரஸில் பணியாற்றிய பின் 1939 ஆம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார். ஆனால் அவர் இறந்துவிட்டாரா என இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.அதேசமயம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி இறக்கும் வரை அவர் இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)