Priyanka Gandhi: ”எங்க அப்பா பெற்ற வாரிசு உரிமை இதுதான்” : பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரியங்கா பதிலடி
Lok Sabha Election 2024: வாரிசு உரிமை தொடர்பாக காங்கிரஸ் மீதான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.
Lok Sabha Election 2024: தங்களது குடும்பத்தினர் செய்த தியாகத்தை பிரதமர் மோடி புரிந்து கொள்ள மாட்டார் என்று, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி ஆவேசம்:
கடந்த வாரம் மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு தனது தாயிடமிருந்து பெற்ற சொத்துக்கு வரி விதிக்கப்படக்கூடாது என்பதற்காக, வாரிசு வரியை ரத்து செய்தார் என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மீண்டும் வாரிசு வரி விதிக்க திட்டமிட்டு வருவதாகவும் தொடர்ந்து சாடி வருகிறார். இந்நிலையில் மொரேனாவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பதிலளித்துள்ளார்.
”உயிர் தியாகமே ராஜிவ் காந்தி பெற்ற உரிமை”
அதன்படி, ”எனது தந்தை ராஜீவ் காந்தி உயிர் தியாகத்தை தான் அவரது தாயாரிடமிருந்து வாரிசு உரிமையாக பெற்றாரே தவிர, சொத்துக்களை அல்ல. இதை மோடி புரிந்துகொள்ளமாட்டார். இந்திரா காந்தி போன்ற பெண்ணைப் பற்றி மோடி முட்டாள்தனமாக பேசும்போது, வம்ச அரசியலை மட்டுமே பார்க்கிறார். எங்களது குடும்பம் செய்த தியாகத்தை புரிந்துகொள்ளமாட்டார். ஆனால், இந்த மாதிரியான கோபம் நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவருக்காக என்று இப்போது நான் புரிந்துகொள்கிறேன். மோடி எனது தந்தையை துரோகி என்று அழைக்கும்போதும், வாரிசு சொத்துகளுக்காக எனது தந்தை சட்டத்தை திருத்தினார் என்றுசொல்லும்போதும், இந்த நாட்டின் மீது நான் வைத்திருக்கும் அன்பை நான் எப்படி விளக்க முடியும்” என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
தந்தையால் தியாகத்தை உணர்ந்தேன் - பிரியங்கா:
மேலும், “ நீங்கள் எங்களை துரோகிகள் என்று சொன்னாலும், நாட்டை விட்டு துரத்தினாலும், சட்ட வழக்குகளில் கட்டிப் போட்டாலும், அதற்கும் மேல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், எங்களை கொலையும் செய்யுங்கள். ஆனால், நாட்டின் மீதான எங்களது தேசபக்தியை இதயத்திலிருந்து நீக்க முடியாது.
எனக்கு 19 வயதாக இருந்தபோது என் தந்தையை துண்டுகளாக வீட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எனது நாட்டின் மீது நான் கோபமாக இருந்தேன். நான் என் தந்தையை அனுப்பினேன், அவரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை. ஆனால், நீங்கள் அவரை துண்டுகளாக என்னிடம் திருப்பி அனுப்பினீர்கள். சிதறிப்போன எனது தந்தையின் உடல் பாகங்கள் தேசியக் கொடியில் மூடப்பட்டு இருந்தன. அப்போது தியாகம் என்பதற்கான அர்த்தம் எனக்குப் புரிந்தது. இன்று எனக்கு 52 வயதாகிறது. இது குறித்து பொது மேடையில் பேசுவது இதுவே முதல் முறை.
ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிவிட்டனர் - பிரியங்கா:
நாட்டில் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அரசாங்க பணிகளுக்கான தேர்வுகள் தொடர்பான வினாத்தாள் கசிவுகளால் ஆட்சேர்ப்பு நடவடிக்கை பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மோடி அரசாங்கம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளை மூடுகிறது. 20 முதல் 22 தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. மோடி அரசின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில் ஏழைகள் மேலும் ஏழைகளாகிவிட்டனர்” என பிரியங்கா காந்தி கடுமையாக சாடினார்.
ராஜீவ் காந்தியின் தாயும், மறைந்த பிரதமருமான இந்திரா காந்தி, அக்டோபர் 31, 1984 அன்று டெல்லியில், தனது வீட்டில் தனது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மே 21, 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.