அன்புமணியை தன் பிள்ளை என்று சொல்லி மத்திய அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுத்தவர் கலைஞர் - எம்பி ஜெகத்ரட்சகன்
திமுகவை எதிர்த்து நிற்கலாமா நீங்க..? அன்புமணியை தன் பிள்ளை என்று சொல்லி மத்திய அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்தவர் கலைஞர் - எம்பி ஜெகத்ரட்சகன்
பாமகவுக்கு வாக்களிப்பதால் எந்த பலனும் இல்லை இந்த தேர்தலில் பாமகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்குட்பட்ட ராதாபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்:
திமுகவை எதிர்த்து நிற்கலாமா நீங்க..?
இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் இறந்த 21 குடும்பங்களுக்கும் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியவர் கலைஞர். 21 குடும்பங்களுக்கு பாமக எதுவும் செய்யவில்லை. இன்று சாதியை சொல்லி ஓட்டு கேட்க எந்த முகத்தோடு வருகிறீர்கள் என பாமகவை விமர்சனம் செய்தார். பாமக வன்னியர் சமூகத்திற்கு செய்தது என்ன?. திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு வன்னியர். இதனை வேறு எந்த இயக்கத்தால் கூற முடியும். உயிரிழந்த 21 பேரின் நினைவாக விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. திமுகவை எதிர்த்து நிற்கலாமா நீங்க..? அன்புமணியை தன் பிள்ளை என்று சொல்லி அவரை மத்திய அமைச்சராக்கியதே கலைஞர் தான். 2004 ஆம் ஆண்டு அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பட்டியலை உருவாக்கி வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர்.
பாமகவுக்கு ஓட்டு போட்டு எந்த பலனும் இல்லை. பாமக இளைஞர்களை தவறான பாதைக்கு திருப்பி பத்தாயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்தார். வன்னியர் சமூகத்திற்கு திமுக மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளிட்ட நன்மைகளை செய்ய முடியும். வன்னியர் சமூகம் திமுகவுக்கு நன்றியோடு இருக்க வேண்டும். இந்த தேர்தல் ஒரு கடுமையான தேர்தல் பாமகவுக்கு சரியான பாடப்புகட்ட வேண்டும் நமக்கு எதிரிகளை போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் அவர்கள் நமக்கு எதிரி அல்ல எனப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து முண்டியம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற செயல் அவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி:
கடந்த 2006 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வைத்த கோரிக்கையை ஆட்சிக்கு வந்த உடனே 20% இட ஒதுக்கீடு கொடுத்து நிறைவேற்றியவர் கலைஞர். மத வெறியை தூண்டிவிட்டு ஆட்சி நடத்தும் பாஜகவுடன் இருந்து கொண்டு பாமக சமூக நீதி குறித்து பேசலாமா. சமூக நீதி வேண்டும் என்றால் முதல்வர் ஸ்டாலினிடம் கேளுங்கள் கண்டிப்பாக செய்து கொடுப்பார்.
இன்று அனைத்து சாதியினரும் அச்சர்கர் ஆகலாம் என சட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக பெண்களும் அர்ச்சகராகலாம் எனவும் கூறியுள்ளார். இன்று திராவிடத்தை பற்றி கிண்டல் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் இன்றைக்கு திராவிடம் இந்தியா முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. அதனை பரவ செய்துள்ளவர் முதல்வர் ஸ்டாலின் என பேசினார்.