Modi Vs Rahul: 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த பிரதமர் மோடியின் வருமானம் - ராகுல்காந்தியின் நிலை என்ன?
Modi Vs Rahul Assets: பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
Modi Vs Rahul Assets: கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2 மடங்கு அதிகரித்துள்ளது.
மோடியின் சொத்து மதிப்பு:
பிரதமர் நரேந்திர மோடியின் ஆண்டு வருமானம் 2018-19 முதல் 2022-23 வரை இரட்டிப்பாகியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தியின் வருமானம் பிரதமரை விட நான்கு மடங்கு அதிகம் என தேர்தல் பிரமாண பத்திரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, ரூ. 3.02 கோடி மதிப்பிலான சொத்துக்களை கொண்டுள்ள மோடி, தனக்கு அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை எனவும், சொந்தமாக கார், நிலம் மற்றும் வீடு கூட கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். 2022-23ஆம் ஆண்டில் தனது வருமானம் ரூ.23.56 லட்சம் எனவும் தேர்தல் பத்திரத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியிடம் ரூ.2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களும், ரூ.2.85 கோடி மதிப்புள்ள நிலையான வைப்பு ரசீதுகளும் உள்ளன
ராகுலின் சொத்து மதிப்பு:
அதே 2022-23 நிதியாண்டில் ராகுல் காந்தியின் வருமானம் ரூ.1.02 கோடியாக இருந்துள்ளது. இது பிரதமரின் வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். பங்குகள், மியூட்சுவல் ஃபண்ட்ஸ், சேமிப்புக் கணக்கு, தங்கப் பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் மொத்தம் 9.24 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, வணிக கட்டிடங்கள், விவசாயம் சாரா மற்றும் விவசாய நிலங்கள் உட்பட ரூ.11.15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும் தேர்தல் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். வாடகை வருமானம், எம்பி சம்பளம், ராயல்டி வருமானம், வங்கிகளின் வட்டி, பத்திரங்கள், ஈவுத்தொகை மற்றும் பரஸ்பர நிதிகள், பங்குகள் போன்றவற்றின் மூலதன ஆதாயங்கள் உள்ளிட்ட பல வருமான ஆதாரங்களை ராகுல் காந்தி வெளிப்படுத்தினார். மெஹ்ராலியில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தில் சுமார் 3.778 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உட்பட ரூ.11.15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன.
அதிகரித்த பிரதமரின் வருமானம்:
2018-2019ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் அறிவிக்கப்பட்ட வருமானம் ரூ.11.14 லட்சமாக இருந்த நிலையில், 2022-23ஆம் ஆண்டில் ரூ.23.56 லட்சமாக இருமடங்காக உயர்ந்துள்ளதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 2018-19ல் 1.20 கோடியாக இருந்த ராகுல் காந்தியின் வருமானம் 2022-2023ல் ரூ.1.02 கோடியாக குறைந்துள்ளது.
பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில், கூடுதலாக உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.