முதல்வர் யாரை சொல்கிறாரோ அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர், டெல்லியிலும் நம் ராஜ்ஜியம்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ஒரு எம்பி க்கு ஆறு தொகுதி உள்ளது அவர்களுக்கு ரூ.5 கோடி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு எம்எல்ஏக்கு ரூ.3 கோடி வழங்கப்படுகிறது அதையும் இந்த மோடி புண்ணியவான் கொரோனா நேரத்தில் வழங்கவில்லை.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டையில் பந்தல்குடி சாலையில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிமனையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இணைந்து திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து குயின்ஸ் நாச்சியார் மண்டபத்தில் இந்தியா கூட்டணியின் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், “இந்த தேர்தல் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்க வேண்டும். மத்திய அரசின் பார்வை மாறியிருக்கிறது மத்திய அரசு தொடர்ந்து அருப்புக்கோட்டையை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் ஓடிக்கொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி அல்லது வாரம் இரண்டு நாள் மட்டும் ஓடக்கூடிய இரண்டு நாள் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றினார்கள். சிலம்பு எக்ஸ்பிரஸே இல்லாமல் போகக்கூடிய நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சிலம்பு எக்ஸ்பிரஸ் என்ற பெயர்தான் அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. அதேபோல மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் காங்கிரஸ் திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதற்காக இந்த பட்ஜெட்டில் பணம் ஒதுக்காமல் கைவிட்டு இருக்கிறார்கள். அருப்புக்கோட்டை ரயில்வே ஜங்ஷனாக மாற வாய்ப்பு இருந்தது அதை மறுத்து இருக்கிறது மோடி அரசு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் இந்த திட்டம் கொண்டு வரப்படும் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் ஜங்ஷனாக மாற்றப்படும். தொடர்ந்து உங்களோடு பயணிப்பேன். நீங்கள் கைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து தேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், "நம்மை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர்கள் நம்முடன் இல்லை. ஒருவர் நடிகை மற்றொருவர் நடிகரின் மகன். மாணிக்கம் தாகூர் 20 வருடமாக நம் தொகுதியிலேயே பயணிக்க கூடியவர். நம் உடனேயே இருப்பவர். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஒரு எம் பி எந்த வேலையை செய்ய முடியுமோ அந்த வேலையை அவர் செய்துள்ளார். ஒரு எம்பி க்கு ஆறு தொகுதி உள்ளது அவர்களுக்கு 5 கோடி மட்டுமே வழங்கப்படுகிறது ஆனால் ஒரு எம்எல்ஏக்கு 3 கோடி வழங்கப்படுகிறது அதையும் இந்த மோடி புண்ணியவான் கொரோனா நேரத்தில் வழங்கவில்லை. நம்முடைய கஷ்டங்களை புரிந்து கொண்ட வேட்பாளர் மாணிக்கம் தாகூர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் இணைந்து மாணிக்கம் தாகூர் நிறைய மண் வெட்டி உள்ளார். இருந்தாலும் அவருடைய உடம்பு குறைவில்லை" என கிண்டலாக பேசினார்.
மேலும், “ராகுல் மற்றும் சோனியா காந்தி உடன் நெருக்கமாக இருப்பவர் மாணிக்கம் தாகூர் மத்தியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சிக்கு வரப்போகிறது அப்படி ஆட்சிக்கு வரும்போது மாணிக்கம் தாகூர் எங்களைப் போல் ஒரு நல்ல நிலைமைக்கு வருவார் அதை நான் சொல்லக் கூடாது. நமக்கு நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும். இந்தியா கூட்டணியை நிர்ணயம் செய்து கொடுத்ததே முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். நம்முடைய கூட்டணியில் யாரையும் நாம் வெளியே அனுப்பவில்லை. அனைவரையும் அனுசரித்துச் செல்லக்கூடிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். நாற்பதற்கும் நாற்பது நாம் தான் ஜெயிக்கப் போகிறோம். நாற்பதும் நமது இந்த நாடும் நமதே. கலைஞர் கருணாநிதியை போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை சொல்கிறாரோ அவர்தான் இந்தியாவின் பிரதமர். டெல்லியிலும் நம் ராஜ்ஜியம் தான் நடக்க உள்ளது. எல்லோருக்கும் நல்லது செய்யக்கூடிய காலம் வரும். விடுபட்ட மகளிர்க்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். சலிக்காமல் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்வது போல மாணிக்கம் தாகூரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.