(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election Phase 6: தொடங்கியது 6ம் கட்ட வாக்குப்பதிவு - 11 மணி நிலவர களநிலவரம்
Lok Sabha Election Phase 6: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 6ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Lok Sabha Election Phase 6: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 6ம் கட்டத்தில், 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி உள்ளது.
6ம் கட்ட வாக்குப்பதிவு:
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நடைபெற்ற முதல் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகளில் முறையே 66.14 சதவிகிதம், 66.71 சதவிகிதம் 65.68 சதவிகிதம், 69.16 சதவிகிதம் மற்றும் சுமார் 63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது வரை 429 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்று 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறதுது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
11 மணி நிலவரம்:
7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில், 11 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 25.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 21.69%, உத்தரபிரதேசத்தில் 27.06%, மேற்குவங்கத்தில் 36.88%, ஜம்மு &காஷ்மீரில் 23.11%, ஒடிசாவில் 21.30% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஏற்பாடுகள் தீவிரம்:
சுமார் 11.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1.14 லட்சம் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகின்றனர். 11.13 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில் ஆண்கள் 5.84 கோடி பேர், பெண்கள் 5.29 கோடி பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 5,120 பேர் அடங்குவர் 85 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 8.93 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களும், 100 வயதுக்கு மேற்பட்ட 23,659 வாக்காளர்களும், 9.58 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களும் தங்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு & பாதுகாப்பு:
184 பார்வையாளர்கள் (66 ஜெனரல், 35 போலீஸ், 83 செலவு) ஏற்கனவே தங்கள் தொகுதிகளுக்கு விழிப்புடன் இருக்க வந்துள்ளனர். சில மாநிலங்களில் சிறப்பு பார்வையாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பில் 2,222 பறக்கும் படைகள், 2,295 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 819 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 569 வீடியோ பார்க்கும் குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. மொத்தம் 257 சர்வதேச எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும் 927 மாநிலங்களுக்கு இடையேயான எல்லை சோதனைச் சாவடிகளில் மதுபானம், போதைப்பொருள், பணம் மற்றும் இலவசங்கள் ஆகியவற்றின் சட்டவிரோதப் புழக்கத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. கடல் மற்றும் வான் வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பு உள்ளது. வாக்குச்சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில், துணை ராணூவப்படையினரும் கூடுதலாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
58 தொகுதிகளில் வாக்குப்பதிவு:
பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், ஹரியானவைச் சேர்ந்த 10 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த 1 தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 4 தொகுதிகள், டெல்லியைச் சேர்ந்த 7 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள், மற்றும் மேற்குவங்கத்தச் சேர்ந்த 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி உள்ளது. இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த, அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் நான்காம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மொத்தமாக வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
களத்தில் 889 வேட்பாளர்கள்:
வாக்குப்பதிவு நடைபெற உள்ள 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அனந்த்நாக் - ரஜோரி தொகுதியைச் சேர்ந்த 20 வேட்பாளர்களும் அடங்குவர். அதிகபட்சமாக ஹரியானாவில் 223 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக அனந்த்நாக்கில் 20 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஆறாம் கட்ட தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி தொகுதியில் 70 பேரும், வடகிழக்கு டெல்லியில் 69 பேரும் வேட்பாளர்களாக உள்ளனர்.
நட்சத்திர வேட்பாளர்கள்:
வடகிழக்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் கன்னையா குமார், மறைந்த பாஜக மூத்த தலிவர் சுஸ்மா சுவாராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் புது டெல்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சுல்தான்பூரில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள மேனகா காந்தி மக்களவையில் ஒன்பதாவது முறையாக போட்டியிடுகிறார். இதனிடயே, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு , காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உட்பட பல முக்கிய பிரமுகர்களும் டெல்லியில் இன்று வாக்களிக்க உள்ளனர்.
தலைநகர் டெல்லி யாருக்கு?
தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும், இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தலைநகரில் ஆதிக்கம் செலுத்த பாஜக மற்றும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தகக்து. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி, சில தொகுதிகளை கைப்பற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி கட்டமான 7ம் கட்டத்தில், மீதமுள்ள 57 இடங்களுக்கு ஜூன் 1ம் தேதி நடைபெறும். ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.