தஞ்சையில் தேர்தல் பணிகளை கண்காணிக்க பொதுபார்வையாளர், செலவின பார்வையாளர் நியமனம்
பொது மக்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் கண்டறியும் நேர்வில் பொதுப் பார்வையாளர் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு பொதுப் பார்வையாளர், தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் போலீஸ் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது:
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
இந்திய தேர்தல் ஆணையத்தால் 2024ம் ஆண்டிற்கான மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, தேர்தல் பணிகளை கண்காணிக்கும்பொருட்டு 30 தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கென இந்திய தேர்தல் ஆணையத்தால் பொதுப் பார்வையாளராக (General Observer) கிக்ஹீட்டோ சேமா (Ph:93639 70331) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் கண்டறியும் நேர்வில் பொதுப் பார்வையாளர் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம்.
தேர்தல் செலிவன பார்வையாளர்
அதேபோல், தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கென இந்திய தேர்தல் ஆணையத்தால் செலவின பார்வையாளராக (Expenditure Observer) ஜன்வி திவாரி (Ph: 93639 62884) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். தேர்தல் செலவினங்கள் தொடர்பான விதிமீறல்களை பொதுமக்கள் செலவின பார்வையாளர் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம் எனவும், சட்ட ஒழுங்கு மற்றும் சட்டத்துக்கு புறம்பான விதிமீறல்களை கண்டறியும்பட்டசத்தில் போலீஸ் பார்வையாளராக (Police Observer) நியமனம் செய்யப்பட்டுள்ள ஷரணப்பா (Ph: 93639 72586) தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்களது புகாரினை தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
100 சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவையாறு அரசர் கல்லூரி வளாகத்தில் முதல் தேர்தலில் வாக்களிப்பவருக்கும் மற்றும் அனைத்து வாக்காளரும் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவையாறு அரசர் கல்லூரி வளாகத்தில் இந்திய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி முதலில் வாக்களிக்கும் வாக்காளருக்கும் வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளருக்கும் அனைவரும் 100% வாக்களித்து இந்திய ஜனநாயக தேர்தல் மக்களாட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என அரசு இசைக்கல்லூரி மாணவ மாணவிகள் வில்லுப்பாட்டு, கிராமிய நடனம்,பரதநாட்டியம், நாட்டுப்புறப் பாடல் என கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
துண்டு பிரசுரங்கள் வழங்கல்
நிகழ்ச்சியில் வாக்காளர் என்பதில் பெருமைப்படுங்கள், வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம், தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம், ஓட்டு உரிமை கடமை வலிமை, நேர்மையாக வாக்களிக்க வேண்டும் நேர்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கக்கூடாது அடங்கிய துண்டு பிரசுரங்கள் , ஆடல் பாடல்கள் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் திருவையாறு உதவி தேர்தல் அலுவலர், தேர்தல் அலுவலர் தாசில்தார், அரசர்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், இசைக்கல்லூரியின் பேராசிரியர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.