Lok Sabha Elections 2024: டீ கடையில் பணியாரம் சுட்டு வாக்காளர்களை கவர்ந்த மதுரை அதிமுக வேட்பாளர்
தமிழகம் முழுவதும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், அதே போல் மதுரையில் மாற்றத்தை நீங்கள் உருவாக்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் - அதிமுக வேட்பாளர்
தேர்தல் திருவிழா 2024
மதுரை நாடாளுமன்ற டாக்டர் பா. சரவணன் ஆத்திகுளம், ரிசர்வ்லைன், இ.பி.காலனி, கண்ணேந்தல், மேனேந்தல் ஆகிய பகுதியில் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார் அப்போது ரிசர்வ்லைன் பகுதியில் ஒரு டீக்கடையில் தீவிர வாக்கு சேகரித்தார். அங்கிருந்த மூதாட்டி ஒருவர் டாக்டர் சரவணன் வெற்றி பெற வாழ்த்தினார், தொடர்ந்து அங்கிருந்து வாக்காள பெருமக்களை நலம் விசாரித்து இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து டீக்கடையில் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த பணியாளர்களிடம் நலம் விசாரித்து, தானே பணியாரம் சுட்டு, இந்த பணியாரத்தை திருப்பி போடுவது போல மதுரையும் திரும்ப வேண்டும் அதற்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்காளர்களிடம் பேசினார்.
வேட்பாளர் சரவணன்
இதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் பா. சரவணன் கூறுகையில்...,” இன்றைக்கு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சமையல் பொருட்கள் உயர்வு இவைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கடந்த முறை வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ட்விட்டர் அரசியலைத்தான் நடத்துகிறார், மக்களுக்கு நன்றி சொல்ல வரவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். வெங்கடேசன் தனக்கு ஒதுக்கப்பட்ட 17 கோடி ரூபாய் நிதியில் வெறும் 4.25 கோடி தான் செலவு செய்துள்ளார், மீதி பணம் 13 கோடியை செலவு செய்யவில்லை அந்த பணம் இருந்திருந்தால் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்திருக்கலாம். வெறும் கதை எழுதிவிட்டு, சினிமா நடிகர்களை கீழடிக்கு அழைத்துச் சென்று கேக் வெட்டுகிறார், ஆனால் அங்கே வந்த பிள்ளைகளை எல்லாம் வெயிலில் காக்கவைத்தார். தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது, மதுரை ரயில் நிலையத்தில் கூட போதைப் பொருள் பிடிபட்டபோது கம்யூனிஸ்ட் சேர்ந்த யாரும் குரல் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வெங்கடேசன் கூட அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் செந்தில் பாலாஜி கைதுக்கு கேள்வி எழுப்புகிறார் போராட்டம் செய்கிறார், மக்களுக்காக என்ன போராட்டம் செய்தார்? மக்களுக்காக உழைத்த லீலாவதியை படுகொலை செய்த திமுக கட்சியுடன் இன்றைக்கு கூட்டணி வைத்துள்ளார்கள்.
கம்யூனிஸ்ட் பாதை மாறிவிட்டது அன்று உண்டியல் குலுக்கினார்கள் இன்றைக்கு சூட்கேஸ் தாங்கி செல்கிறார்கள். எடப்பாடியார் மதுரைக்கு 5000 கோடி அளவில் திட்டங்களை செய்துள்ளார், அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரையில் அதிக அளவில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவர திட்டங்களைத் தான் தற்போது முதலமைச்சர் ரிப்பன் வெட்டி திறக்கிறார். இந்த 3 ஆண்டுகளில் புறநகர் பகுதிகளில் எந்த திட்டங்களும் கொண்டுவரவில்லை. தமிழகம் முழுவதும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், அதே போல் மதுரையில் மாற்றத்தை நீங்கள் உருவாக்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நிச்சயம் உங்கள் குரலாக டெல்லியில் ஒலித்து உங்களுக்கு வேண்டிய திட்டங்களை பெற்றுத்தர நான் உழைப்பேன் என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha Elections 2024: பரப்புரையில் பலூனை உடைத்து விளையாடிய செல்லூர் ராஜூ, சரவணன் - மதுரையில் கலகலப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - BJP Manifesto: "எங்கள் காதுகள் பாவமில்லையா" பாஜக தேர்தல் அறிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!