Election Results 2024: தருமபுரியில் வாக்கு எண்ணும் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்-காவல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் ஈடுபடவுள்ளனர்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தருமபுரி செட்டி கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நான்கு அடுக்கு பாதுகாப்புகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணியும், திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ.மணி, அதிமுக சார்பில் மருத்துவர் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னி வளவன் உள்ளிட்ட 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளும் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி என ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 15,24,998 வாக்குகள் உள்ளனர். இதில் 12, 38, 123 வாக்குகள் பதிவானது. தருமபுரி தொகுதி வாக்குப்பதிவில் 81.20 சதவீத வாக்குகள் பதிவாகி தமிழக அளவில் முதல் இடம் பெற்றுள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை ஒரு மேஜைக்கு 14 வாக்கு பெட்டிகள் என வாக்குகள் எண்ணப்பட உள்ளது. மேலும் பாலக்கோடு 20 சுற்றுகளும், பென்னாகரம் தொகுதியில் 21, சுற்றுகளும். தருமபுரி மற்றும் அரூர் சட்டப்பேரவை தொகுதியில் 22 சுற்றுக்களும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 23 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த
வாக்கு எண்ணிக்கை மையத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கி.சாந்தி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அருணா ரெஜோரியா, அரூர் மற்றும் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்ரீ ஹா்ஷா எஸ்.செட்டி இருவரும் மத்திய பார்வையாளர்களாக இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்களை, மையத்திறாகு வெளியே உள்ள பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஒலிப் பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. அதேப்போல் தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையமான செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.