Lok Sabha Election Result 2024: வாக்கு வித்தியாசத்தில் புதிய வரலாறு! டாப் 5 வெற்றியாளர்கள் - ஓரங்கட்டப்பட்ட அமித் ஷா!
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள், 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, தற்போதைய சூழலில், பாஜக கூட்டணி 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. இதனிடையே, இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை சில வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். அந்த வகையில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
5. அமித் ஷா - 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசம்:
குஜராத் மாநிலம் காந்தி நகரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிட்ட, பாஜக மூத்த தலைவரான அமித் ஷா சுமார் 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சோனல் ரமன்பாய் படேல் 2.66 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.
4. சி.ஆர். பாட்டில் - 7.73 லட்சம் வாக்குகள் வித்தியாசம்:
குஜராத்தில் பாஜக மாநில தலைவரான சி.ஆர். பாட்டில் நவசாரி தொகுதியில் 7.73 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம் அவர் நான்காவது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அபார வெற்றி பெற்று, இந்திய தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்று இருந்தார்.
3. சிவராஜ் சிங் சவுகான் - 8.21 லட்சம் வாக்குகள் வித்தியாசம்:
மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரான சிவராஜ் சிங் சவுகான், விடிஷா தொகுதியில் போட்டியிட்டு 8.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், இந்திய தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
2. ரகிபுல் ஹுசைன் - 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசம்:
அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட, ரகிபுல் ஹுசைன் 10 லட்சத்து 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் முகமது பத்ருதீன் அஜ்மல், 459409 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம், இந்திய தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில், ரகிபுல் ஹுசைன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
1. ஷங்கர் லால்வானி - 11.72 லட்சம் வாக்குகள் வித்தியாசம்:
மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஷங்கர் லால்வானி, 11.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், இந்திய தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில், ஷங்கர் லால்வானி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கியதால், நோட்டாவிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.