Lok Sabha Election 2024: நெல்லையில் சீல் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூம்..! 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லையா?
6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் தங்களது வாக்குகளை பதிவுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை பாராளுமன்ற தொகுதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், மற்றும் ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இங்கு 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அமைக்கப்பட்ட 1810 வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு முடிந்து மண்டலம் வாரியாக 183 மண்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு சட்டமன்றம் வாரியாக தனித் தனியாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. அனைத்து வாக்கு பதிவு எந்திரங்களும் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்ட அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து மத்திய காவல் படை, சிறப்பு காவல்படை மற்றும் உள்ளூர் போலீசார் என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் அனைத்து அறைகளும், வாக்கு எண்ணும் மையத்தின் முழு பகுதியும் சிசிடிவி கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அறையின் மின் இணைப்புகளும் பாதுகாப்பு காரணம் கருதி துண்டிக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர்கள், அரசியல் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் நாள் வரை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கும் அதற்கான அனுமதி அட்டை வழங்கப்படுகிறது, அவர்களும் சுழற்சி முறையிலேயே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றவர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லையில் உள்ள 8,08,127 வாக்காளர்களில் 513441 ஆண் வாக்களர்களும், 846225 பெண் வாக்காளர்களில் 546963 பெண் வாக்காளர்களும் என மொத்தமாக 16 லட்சம் வாக்களர்களில் 1060461 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் தங்களது வாக்குகளை பதிவுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.