Lok Sabha Election 2024: தனது பவரை மீண்டும் நிரூபிப்பாரா எஸ்.பி. வேலுமணி? - கோவை, பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்கள் யார்?
இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி இல்லையென்றாலும், வலிமையான கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது என்பது அதிமுக மற்றும் எஸ்.பி. வேலுமணி முன்புள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.
1974 ம் ஆண்டு இடைத்தேர்தல் மூலம் அதிமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரை தந்த கோவையில், அதிமுக தனது முதல் நாடாளுமன்ற உறுப்பினரை பெற 2014 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. கோவை மக்களவைத் தொகுதியை அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வதை வழக்கமான கொண்டிருந்ததே அதற்கு காரணம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் வென்ற அதிமுக, இந்த தேர்தலில் வலிமையான கூட்டணியை அமைக்க முடியாமல் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுவது போன்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் இடையேயான அரசியல் சூழல் மாறியுள்ளது.
தவறிய கூட்டணி கணக்கு
கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை எதிர்கொண்டு, தோல்வியை தழுவியது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக, மீண்டெழும் வகையில் ஒரு பெரிய வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்த சூழலில் அண்ணாமலை உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. தமிழ்நாட்டில் வலிமையான அடித்தளம் பாஜகவிற்கு இல்லையென்பதால், வலுவான வாக்குவங்கியை கொண்ட அதிமுகவுடன் மற்ற கட்சிகள் அனைத்தும் உடன் இருப்பார்கள், பாஜக தனித்து விடப்படும் என எதிர்பார்த்தது. அதேபோல திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக உடன் கூட்டணிக்கு வருமெனவும், சிறுபான்மையின வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் எனவும் அதிமுக தலைமை எதிர்பார்த்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தமாகா, பாமக போன்ற கட்சிகள் பாஜக உடன் கூட்டணி அமைத்தது, அதிமுகவிற்கு ஏமாற்றத்தை தந்தது. எஸ்டிபிஐ கட்சி மட்டுமே அதிகாரபூர்வமாக அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மட்டுமே அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக எதிர்பார்த்தது போல ஒரு மெகா கூட்டணியை அமைக்க முடியவில்லை. கூட்டணியில் உள்ள கட்சிகளும் மாநிலம் முழுவதும் வாக்கு வங்கிகளை கொண்ட கட்சிகளாக இல்லாததால், தனித்து போட்டியிடுவது போன்ற நிலையில் உள்ளது.
பவரை நிரூபிப்பாரா எஸ்.பி.வேலுமணி?
கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மண்டலம் தான் அதிமுகவிற்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று தந்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடியது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க அமைச்சராக வலம் வந்த எஸ்.பி. வேலுமணி பொறுப்பாளராக இருந்த கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் 17 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் அதனைத்தொடர்ந்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செந்தில்பாலாஜியின் தேர்தல் வியூகங்களால் திமுக அபார வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக, பாஜக ஆகிய கட்சிகள் பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டாலும், அதிமுக அமைதியாகவே இருப்பது போல உள்ளது. கூட்டணி இல்லையென்றாலும், வலுவான வாக்கு வங்கியை கொண்ட கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் வெற்றி பெற்று தனது பலத்தை நிருபீக்க வேண்டிய கட்டாயத்தில் எஸ்.பி. வேலுமணி உள்ளார்.
கோவை, பொள்ளாச்சியில் எஸ்.பி. வேலுமணி கைகாட்டும் நபர்களே வேட்பாளர்கள் என்பதால், அவரது ஆதரவாளர்கள் தான் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி போன்ற சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது. அதிமுக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழ் ஆசிரியருமான கல்யாண சுந்தரம் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமாக இருப்பதால் கோவை அல்லது பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை தொகுதியில் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளருமான சந்திரசேகரின் மனைவியும், மாநகராட்சி கவுன்சிலருமான ஷர்மிளா சந்திரசேகர், அதிமுக ஐடி விங்க் கோவை மண்டல செயலாளர் விக்னேஷ் ஆகியோருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல பொள்ளாச்சி தொகுதியில் தொண்டாமுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் மதுமதி என்பவரின் மகன் நிஷ்கலன், முன்னாள் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி இல்லையென்றாலும், வலிமையான கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது என்பது அதிமுக மற்றும் எஸ்.பி. வேலுமணி முன்புள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.