உஷாரா இருங்க மக்களே கள்ள ஓட்டு போடுவாங்க - குண்ட தூக்கி போட்ட பிரேமலதா
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தீவிர பிரச்சாரம்.
திமுக தனது பணபலம், அதிகார பலத்தை கட்டவிழ்த்துவிட தயாராக இருக்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்தார்.
மக்களவைத் தேர்தல் 2024
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பார் இ. ராஜசேகரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேமுதிக பிரேமலதா பிரச்சாரம்
இதனை அடுத்து அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். இதனை அடுத்து திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா கூட்டணி கட்சியினர் மத்தியில் பேசுகையில், “கச்சத்தீவு பிரச்சனை மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது. கலைஞர் மற்றும் இந்திரா காங்கிரஸ் இணைந்து நமது உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். அன்றிலிருந்து ஆரம்பித்ததுதான் மீனவர்களின் பிரச்சனை. திமுக, காங்கிரஸ், கச்சத்தீவு மற்றும் காவிரி உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டார்கள்.
இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு காரணம் திமுக காங்கிரஸ் தான். எல்லா பிரச்சனைக்கும் திமுக மற்றும் காங்கிரஸ்தான். இந்த தேர்தலில் இந்த கூட்டணியை மகத்தான வெற்றி பெற வையுங்கள்.
சீக்கிரம் ஓட்டு போட்டு விடுங்கள்
வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் அன்று காலையிலே சென்று வாக்களித்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் வாக்கு கள்ள ஓட்டாக மாறிவிடும். இன்று திமுக ஆட்சி பலம் அதிகார பலம் பணபலம் வைத்து சட்ட - ஒழுங்கு சீர்கேடு உருவாக்கி எல்லா தொகுதியிலும் ஜெயிக்க அனைத்து வன்முறைகளையும், கட்டவிழ்த்துவிட விட தயாராக இருக்கிறார்கள்.
இளைஞர் பணிக்கு ஏதாவது உண்டா, இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா” என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் பேசுகையில், ”அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்களவையில் காஞ்சிபுரம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பார் என வாக்கு கொடுத்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சார மேற்கொண்ட நிலையில் ஏராளமான தேமுதிக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருவதற்கு முன்பாக அதிமுக பிரச்சார பாடல், தேமுதிக பாடல்கள் மற்றும் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. அப்பொழுது விஜயகாந்த் பாடலுக்கு தேமுதிக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து நடனம் ஆடியது தொண்டர்கள் இடையே வரவேற்பை பெற்றது. ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரும் இணைந்து நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது. குத்தாட்டம் போட்டு அதிமுக வேட்பாளருக்கு தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்கு கேட்டது வரவேற்பை பெற்றுள்ளது .குறிப்பாக விஜயகாந்த் நடித்த பிரபலமான , நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம் என்ற பாடலுக்கு வாய் அசைவுடன் தொண்டர்கள் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.