தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம் திரும்ப பெறப்படும் - பி.ஆர்.பாண்டியன் திட்டவட்டம்
விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டப்படும்.
தஞ்சாவூர்: விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டப்படும். தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டம் திரும்ப பெறப்படும் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள்
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் என்.செந்தில்குமாருக்கு ஆதரவு கேட்டும், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெளியிட்டும் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
தமிழக நீர் ஆதார உரிமைகள் பாதுகாக்கப்படும்
தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். விவசாயிகளின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் வாக்குறுதியாக வழங்கி வருகிறோம். இதில் குறிப்பாக காவிரி உரிமையை மீட்டு எடுப்பதும், ராசி மணல் பகுதியில் அணை கட்டி முடிக்கப்படும். முல்லைப் பெரியாறு நீரின் கொள்ளவை 152 அடி உயர்த்தப்படும். தமிழக நீர் ஆதாரங்களின் உரிமைகளை பாதுகாக்கப்படும்.
விவசாயிகள், வணிகர்கள் கொண்ட வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள்
சிறுவாணி, பாலாறு, தென்பெண்ணை அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தப்படும். நீர் பாசன துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டப்படும். தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டம் திரும்ப பெறப்படும். பரந்தூர் விமான நிலையம், நெய்வேலி அணுமின் நிலையங்களுக்கு நிலம் எடுப்பது தடுக்கப்படும். விவசாயிகள், வணிகர்கள் கொண்ட வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்படும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை
காவிரி டெல்டாவில் பேரழிவு திட்டங்களை தடுத்து நிறுத்தப்படும். தமிழக அரசே பயிர்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ குணம் கொண்ட பதநீர், கள் விற்பனையை ஊக்கப்படுத்தப்படும். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் தடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்படும். தேங்காய். எள், நிலக்கடலை, எண்ணெய் விற்பனை வலியுறுத்தப்படும்,
பேரிடர் இழப்பீடு நிதி
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வலியுறுத்தப்படும். காவிரி டெல்டாவில் பேரழிவு திட்டங்களை தடுத்து நிறுத்துவோம், பேரிடர் இழப்பீடு நிதியை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தப்படும் என வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று வாக்கு சேகரித்து வருகிறோம். பிரச்சாரத்திற்கு செல்லும் இடம் எல்லாம் மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு உள்ளது. விவசாயிகள் மக்கள் நம்புகின்றனர். அதனால் எங்களின் வேட்பாளருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியிலிருந்து பச்சை சேலை உடுத்தி வந்த சுமார் 150 பெண் விவசாயிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த விவசாயிகள், வேட்பாளருடன் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.