ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
52 நாட்கள் பயணிக்கும் இந்த பயணத்தில், 52 முக்கிய நகரங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் இந்த பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து செல்கிறது.
18-வது மக்களவைக்கான தேர்தலுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் விழிப்புணர்வு மற்றும் இந்தியாவின் நாடிக் கணிப்பை அறிவதற்காக, நாட்டின் முதன்மை செய்திநிறுவனங்களில் ஒன்றான நமது ABP செய்திக் குழுமம் சார்பில், தேர்தல் பேருந்து ஒன்று 'மகாபாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் பயணிக்கிறது.
இந்த பாரத் எக்ஸ்பிரஸ் தேர்தல் பேருந்தின் பயணம், இந்தியாவின் தென் பகுதியான தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து இன்று தொடங்குகிறது. ராமேஸ்வரத்தில் தொடங்கி, நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகளில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய தொகுதிகள் வழியாக 52 நாட்கள் பயணித்து, லக்னோ வழியாக, அண்மையில் தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்த அயோத்தி நகரில் முடிவடைகிறது.
52 நாட்கள் பயணிக்கும் இந்த பயணத்தில், 52 முக்கிய நகரங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் இந்த பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து செல்கிறது. அப்போது, அத் தொகுதிகளில் உள்ள மக்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிச் செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதுமட்டுமல்ல, தேர்தல் தொடர்பாக மக்களின் மனவோட்டம் என்ன என்பதை, அதாவது நாட்டின் நாடிக் கணிப்பு என்னவென்பதை பதிவு செய்கிறது ABP செய்திக்குழு. இந்தப் பயணத்தில், ஏபிபி குழுமத்தின் அங்கமான, தமிழ் செய்தித்தளமான ABP நாடு-வும் பயணித்து, இந்தியாவின் நாடிக்கணிப்பு மட்டுமின்றி, தமிழகத்தின் மக்கள் கணிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டவுள்ளோம்.
இந்தப் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம், தமிழகத்தில் தொடங்கி, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தெலுங்கானா, மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், சண்டிகர், ஹரியானா, டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஓடிசா உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்குச்சென்று, இறுதியாக அயோத்தியில் பாரத் எக்ஸ்பிரஸ், தமது பயணத்தை நிறைவு செய்கிறது.
இந்தப்பயணத்தின் போது, ’வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள மக்களின் வாழ்வாதார நிலைகள், முக்கிய இடங்கள், பின்னணி, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், பல்வேறு கட்சிகளின் செயல்பாடுகள், வாக்காளர்களின் மனவோட்டம் என்ன? உள்ளிட்ட சகல விடயங்களையும், உள்ளது உள்ளபடியே, அனைத்துத் தரப்பு கருத்துகளையும் பதிவு செய்யவிருக்கிறோம்.
நாட்டின் நாடிக்கணிப்பை அறியம் பயணத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் சமபங்கு வாய்ப்புகளைத் தந்து, உண்மையைக் கொண்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் செல்ல இருக்கிறது ABP செய்திக்குழுமம். அதுவும், தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் கொண்டுச் செல்வதற்காக, ஏபிபி குழுமத்தின் அந்தந்த மொழிகளுக்கான செய்தி தளங்கள், தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களும் இந்தப் பேருந்தில் பயணம் செய்து, அவரவர் மொழியில் அந்தந்த மாநில மக்களிடம் நாட்டின் நாடிக் கணிப்பு எப்படி இருக்கிறது என்பதை வழங்க இருக்கின்றனர். அந்த வகையில், நமது ABP நாடு-வும் தமிழில், நாட்டின் மக்கள் மனவோட்டத்தை உங்கள் கண்முன் கொண்டு வரவுள்ளது.
அதேபோல், இந்த பாரத் எக்ஸ்பிரஸ் பயணத்தின் போது, வேறு எந்தத் தொலைக்காட்சிகளிலும் வராத அளவுக்கு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெரிய, சிறிய என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆகியோரை நேரில் சந்தித்து, அவர்தம் கருத்துகளைப் பதிவு செய்ய இருக்கிறோம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான, இந்திய மக்களவைக்கான இந்தத் தேர்தலின் பல சாராம்சங்களை, பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்தின் மூலம் நாட்டின் நாடிக்கணிப்பை, ABP நாடு-வின் வலைதளம், யூ ட்யூப், ஃபேஸ் புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக தளங்களில் நீங்கள் வாசிக்கலாம் – பார்க்கலாம். அதற்கேற்ப நமது செய்திக்குழு, உடனுக்குடன் நாட்டின் மனவோட்டத்தை உங்களிடம் கொண்டு வந்துச் சேர்ப்பர் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.