Kanchipuram Lok Sabha Constituency: காஞ்சி மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன ? - சவால் விடும் திமுக , அதிமுக, பாமக
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியை பொருத்தவரை பிரச்சாரங்கள் முடிவடையும் நிலையில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024 (Kanchipuram Lok Sabha Constituency 2024)
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ), செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.
வாக்காளர்களின் விவரம்
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை -- 17,32,946
ஆண் வாக்காளர்கள் -- 8,46,016
பெண் வாக்காளர்கள் --- 8,86,636
மூன்றாம் பாலின வாக்காளர்கள் --- 294
யாருடைய கோட்டை ?
செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில்
காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2024 தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்கள்
இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் க. செல்வம் களத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர் .
க. செல்வம் பலம் மற்றும் பலவீனம்
பத்தாண்டு கால பாரதி ஜனதா கட்சி ஆட்சி விமர்சனம் செய்தும் , பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு , பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறி , பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு , ஆகியவற்றை முன்னுறுத்தி வாக்குகளை சேகரிக்கிறார் . மேலும் மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், காலை உணவு திட்டம் ஆகிய திமுக அரசின் சாதனைகளையும், ஐந்தாண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்த திட்டங்களையும் முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்கிறார்.
திமுக கட்சியில் செல்வத்திற்கு எதிராக
அதிருப்தி கிடையாது. திமுக அடிமட்ட தொண்டர்களிடம் கூட சகஜமாக பழகக்கூடிய நபர். தொகுதி முழுவதும் அறியப்பட்ட முகம். கூட்டணிக் கட்சியின் வாக்கு வங்கி ஆகியவை செல்வத்தின் பலமாக உள்ளது. இறுதி கட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டது ஆகியவை பலமாக உள்ளது.
திமுக அரசுக்கு எதிராக இருக்கும் வாக்குகள். தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கு போட்டியிடுவதால் கட்சியைத் தாண்டி , பொதுமக்களிடம் ஒரே வேட்பாளரை தான் நிறுத்துவார்களா ? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சில இடங்களில் கூட்டணி கட்சியின் ஒத்துழைப்பும் கிடைப்பதில்ல இவை செல்வத்தின் பலவீனம்.
அதிமுக வேட்பாளர் ராஜசேகர் பலம் மற்றும் பலவீனம்
நகரத்திற்கு ஏற்றார் போல் கிராமங்களும் அதிக அளவு உள்ளது தொகுதி என்பதால் அதிமுகவின் கட்டமைப்பு பெருமளவில் உதவி செய்கிறது. தேமுதிகவிற்கு இருக்கும் கட்டமைப்பு மற்றும் வாக்கு வங்கி உதவி செய்கிறது. புரட்சி பாரதக் கட்சிக்கும் செல்வாக்கு உள்ள பகுதி . திமுக அரசை முழுமையாக விமர்சனம் செய்து தனக்கு வாக்குகளை சேகரிக்கிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த சாதனைகள், பாலாற்றில் தடுப்பணை கட்டியது உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறார். திமுக அரசுக்கு எதிராக செல்லும் வாக்குகள் பெருமளவை ராஜசேகர் அறுவடை செய்ய வாய்ப்புள்ளது . நம்பர் ஒன் காஞ்சி என செயல் திட்டத்தை முன்வைத்து வாக்குகளை சேகரிப்பது ராஜசேகரின் பலமாக பார்க்கப்படுகிறது
வெளியூர் வேட்பாளர் என்பது பலவீனமாக உள்ளது. பிரதமர் வேட்பாளர் இல்லாததும், பல இடங்களில் நிர்வாகிகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் சரிவர வேலை செய்யாது ராஜசேகரின் பலவீனமாக பார்க்க வேண்டும்.
பாமக வேட்பாளர் ஜோதி பலம் மற்றும் பலவீனம்
பெண் வேட்பாளராக களமிறங்குவது முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. வாக்கு சேகரிக்கும் அனைத்து இடங்களிலும் மது கடைகளை மூடப்படும் என வாக்கு சேகரிப்பது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வட தமிழ்நாடு என்பதால் பாமகவின் , கட்டமைப்பு முழுமையாக உதவுகிறது. பிரதமர் மோடியை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிப்பதால் , குறிப்பிட்ட சமுதாய வாக்குகளை ஜோதி அறுவடை செய்வது பலமாக பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க பாமகவை நம்பி களம் இறங்குவது பலவீனமாக உள்ளது. கூட்டணி கட்சியினர் யாருக்கும் செல்வாக்கு இல்லாதது முக்கிய பலவீனம். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிராக இருக்கும் மனநிலை பலவீனமாக உள்ளது.
நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ் குமார்
தொடர்ந்து திராவிட கட்சிகளின் ஆட்சி மற்றும் பாஜகவின் ஆட்சியை விமர்சனம் செய்து வாக்குகளை சேகரிக்கிறார். சீமான் தொகுதிக்கு இரண்டு முறை வந்து சென்றதும், மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டதும் பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை நம்பி களம் இறங்குகிறார். தொகுதி முழுவதும் குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் இருந்தாலும், அவை வெற்றி பெறும் அளவிற்கான வாக்குகள் இல்லை என்பதால் அதுவே பலவீனமாக உள்ளது.
மும்முனை போட்டி
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி மும்முனை போட்டியாகவே பார்க்கப்பட்டாலும், அதிமுக திமுகவிற்கு இடையேயான போட்டியாகவே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக கணிசமான வாக்குகளை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக் கட்சியின் பலத்தால் செல்வத்திற்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி நேரத்தில் வாக்காளர்கள் எடுக்கும் முடிவில், தொகுதியின் நிலைமை மாறவும் வாய்ப்பு உள்ளது.