Lok Sabha Election 2024: திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் நடைபயணம் செய்து வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பின்போது குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஆனது நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் சோமாசுபாடி அருகே இன்று மாலை நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருவண்ணாமலை மற்றும் ஆரணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். இதற்காக நேற்று திருவண்ணாமலை வந்த முதலமைச்சர் இன்று காலை முதல் கள்ளக்கடை வீதி, அண்ணாமலையார் கோவில் மற்றும் காந்தி சிலை வரையில் நடைபயணம் மேற்கொண்டவாறு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கடை வியாபாரிகள் வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், சி.என். அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினரானதும் நிச்சயம் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் என உறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பின்போது குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் சி.என். அண்ணாதுரையுடன் சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். முதலமைச்சர் வருகையையொட்டி அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த நிகழ்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் சட்டசபை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி உடனிருந்தனர்.