Lok Sabha Election: ”வத்திகுச்சி பத்திக்குமா” மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முற்றேற்றக் கழகத்திற்கு தீப்பெட்டிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முற்றேற்றக் கழகத்திற்கு தீப்பெட்டிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை திருச்சி மாவட்ட தலைமை தேர்தல் ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றது.
18வது மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. மத்தியில் அட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மக்களவை எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள பெரும்பாலான கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கின்றது. இந்த கூட்டணியில் மாநிலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக யார் உள்ளனரோ அவர்கள் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்து தேர்தலை எதிர்கொள்ள பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் I.N.D.I.A கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி என இரண்டு பெரும் கட்சிகள் களத்தில் இருந்தாலும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியும் களமிறங்கவுள்ளது. இந்த கூட்டணியில் பாமக போன்ற வாக்கு வங்கி கொண்ட கட்சி இடம் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் இருமுனைப் போட்டிதான் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகின்றது. மதிமுக சார்பில் வேட்பாளராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வின் மகன் துரை வைகோ களமிறங்குகின்றார். மதிமுக என்றாலே அவர்களின் சின்னம் பம்பரம் சின்னம் என மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. இப்படியான நிலையில், மதிமுக, திருச்சி மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரிட தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தேர்தல் விதிப்படி மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தினை ஒதுக்க முடியாது என தேர்தல் அலுவலர் கூறியதால், மதிமுகவுக்கு என்ன சின்னம் ஒதுக்கப்படும் என்ற கேள்வி மதிமுகவினரிடமும் கூட்டணிக் கட்சியினரிடமும் பிரச்சாரத்தை வீரியமாக கொண்டு செல்வதில் தொய்வை ஏற்படுத்தியது.
இதனால் திருச்சி மக்களவைத் தொகுதி முழுவதும் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை மட்டும் நடத்தி வந்தனர். மேலும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னத்தை தேர்தல் அலுவலர் வழங்கியுள்ளார் என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்காததால் எந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்ற குழப்பத்தில் கட்சியினர் இருந்துவந்தனர்.
இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 30ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தீப்பெட்டிச் சின்னத்தினை திருச்சி மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் ஒதுக்கியுள்ளார்.