எதிர்க்கட்சியாக இருந்தால் நமக்கென்ன ..! திமுக பணிமனையில் தஞ்சமடைந்த அதிமுக..!
Kanchipuram Election : காஞ்சிபுரம் திமுக பணிமனையில் தஞ்சமடைந்த அதிமுக தொண்டர்கள்
காஞ்சிபுரம் திமுக பணிமனையில் தஞ்சமடைந்த அதிமுக தொண்டர்கள்
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு , முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அதேபோன்று தலைவர்களும் தினமும் ஒவ்வொரு தொகுதிக்கு சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் இராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி , காஞ்சிபுரம் தேரடி பகுதியில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கடும் வெயில்
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வாகன மூலம் பிரச்சாரம் நடைபெற்ற இடத்திற்கு கொண்டுவரப்பட்டனர். காலை 9 மணிக்கு பொதுமக்கள் வர துவங்கியதால் காந்தி ரோடு பகுதி பொதுமக்களால் நிறைய துவங்கியது. நேரம் செல்லச் செல்ல தொடர்ந்து வெயிலில் தாக்கம் அதிகரிக்க வந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். பல தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி சுமார் 11 மணி அளவில் வருகை புரிந்து பிரச்சாரத்தை தொடங்கினர். அந்த சமயத்தில் கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் அருகில் இருந்த கடை வாசல்களில் இருந்த நிழலில் தஞ்சம் புகுந்தனர்.
.
திமுக தேர்தல் அலுவலகத்தை நோக்கி
அப்போது வெயில் தாக்கத்தால் கஷ்டப்பட்ட அதிமுக தொண்டர்கள் சிலர் , எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்த பொழுது , அருகில் இருந்த திமுக கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனையில் ஓய்வெடுத்தனர். அதிமுக தலைவர்களின் புகைப்படத்தை badge யை சட்டையில் குத்திக்கொண்டு திமுக பணிமனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எலியும் - பூனையும்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக பிரதான கட்சிகளாக உள்ளன. தலைவர்களிடையே வெளியில் பார்த்துக் கொள்ளும் பொழுது பரஸ்பரம் இருந்தாலும், குறிப்பாக இரண்டு கட்சி சார்ந்த தொண்டர்கள் இணைவது அரிதாகவே இருக்கும். ஆனால் அவற்றுக்கு மாற்றாக இன்று வெயில் கொடுமையை தாங்க முடியாமல் , திமுக பணிமனையில் அதிமுகவினர் தஞ்சம் அடைந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொடரும் பிரச்சாரங்கள்
தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் .
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.