Lok Sabha Election 2024: கோவை தொகுதியில் 37 பேர் போட்டி ; 3 ராமச்சந்திரன், 5 ராஜ்குமார் போட்டி
வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், இன்று 4 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன் காரணமாக கோவை மக்களவை தொகுதியில் 37 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20 ம் தேதி துவங்கி, கடந்த 27 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் முக்கிய அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சுயேட்சை வேட்பாளர்களும் அதிக அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். கோவை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட 59 வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலணை கடந்த 28 ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மொத்தம் 41 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், இன்று 4 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன் காரணமாக கோவை மக்களவை தொகுதியில் 37 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
ஒரே பெயரைக் கொண்ட வேட்பாளர்கள்
கோவையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 11 கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன. 26 சுயேட்சைகளும் போட்டியில் பங்கேற்றுள்ளனர். முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் பெயரைக் கொண்ட சுயேட்சைகள், வாக்களர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் போட்டியிடுவது வழக்கம். அதன்படி திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களின் பெயரை கொண்ட சுயேட்சைகளும் களமிறங்கியுள்ளனர். அதிகபட்சமாக ராஜ்குமார் என்ற பெயரை கொண்ட 5 பேர் கோவையில் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் 4 சுயேட்சைகள் என 5 ராஜ்குமார்கள் போட்டியிடுகின்றனர். இதேபோல அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் 2 சுயேட்சைகள் என 3 ராமச்சந்திரன்கள் களத்தில் உள்ளனர். பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடும் நிலையில், அண்ணாதுரை என்ற சுயேட்சையும் போட்டியிடுகிறார். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி தொகுதியில் 18 பேர் போட்டி
இதேபோல பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் மொத்தம் 29 வேட்பாளர்கள் 44 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலணையின் போது 18 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், 11 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக சார்பில் ஈஸ்வரசாமி, அதிமுக சார்பில் கார்த்திகேயன், பாஜக சார்பில் வசந்தராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இன்று யாரும் வாபஸ் பெறததால், 18 பேர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி என்ற பெயரை கொண்ட, ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டியிடுகிறார். உதயசூரியன் சின்னத்தை போன்ற தோற்றத்தை கொண்ட 7 கதிர்களை கொண்ட பேனா முனை சின்னம் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் 3 சுயேட்சைகள் என மொத்தம் 4 கார்த்திகேயன்கள் போட்டியிடுகின்றனர். அதில் ஒரு சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேயனுக்கு இரட்டை இலை சின்னம் போன்ற தோற்றம் கொண்ட மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்களை சந்தித்து நாளை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.