Local body election | உள்ளாட்சி தேர்தலை நடத்த தைரியமில்லாத எடப்பாடி பழனிச்சாமிக்கு, திமுக அரசை குறை கூற எந்த தகுதியும் இல்லை - கனிமொழி எம்பி
”உள்ளாட்சி தேர்தலை அதிமுக நடத்தவில்லை ஏனெனில் ஒன்று வெற்றி பெற வாய்ப்பு இல்லை, இன்னொன்று உள்ளாட்சியில் இருக்கும் எல்லாத்தையும் சுரண்டி வீட்டிற்கு எடுத்துவிட்டு போகும் வாய்ப்பு அது தான்”
திமுக மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலப்பாளையம் பஜார் திடலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசுகையில்,
உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டமன்றம் பாராளுமன்ற தேர்தலை விட மிக முக்கியமானதாகும்; உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகளை சரியானவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் அப்படி தேர்ந்தெடுத்தால் தான் உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சியில் சிறப்பாக அதிமுக அரசு செயல்பட்டு வந்ததாக கூறிவருகிறார்.
உள்ளாட்சி தேர்தலையே நடத்த தைரியம் இல்லாத பழனிச்சாமி அரசு எப்படி சிறப்பாக செயல்பட்டிருக்க முடியம், 10 ஆண்டுகள் உள்ளாட்சியில் ஊழல்தான் நடந்துள்ளது. அதுபோன்று அதிமுக ஆட்சி காலத்தில் கூறப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை, ஆனால் நமது முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வரும் முன்னரே ஊர் ஊராக சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை அறிந்து ஆட்சிக்கு வந்தவுடன் அதற்காக தனித்துறையையே ஏற்படுத்தி தீர்வு கண்டு வருகிறார். கொரோனா முழு அடைப்பு நேரத்தில் 5 ஆயிரம் கொடுங்க ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதாது என தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை, நான் ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் தருகிறேன் என்று கூறினார். அதே போல கொடுத்தாரா? மகளிருக்கு பெண்களுக்கு நகர்ப்புற பேருந்துகளில் கட்டணம் இல்லை என கூறினார், அதே போல வந்த உடனே இலவச பயணத்தை நிறைவேற்றினாரா இல்லையா? பெண்களின் சுய உதவிக்குழுக்கான கடன் ரத்து என தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
தொழில் வளத்தை உருவாக்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடிக்கு தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் வந்துள்ளது, இதில் தென்தமிழகத்திற்கு முக்கியத்துவம் தரப்படும் தொழில்கள் தொடக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். இது போன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோமா இல்லையா? மக்களிடம் வந்து பேசினால் பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும், நீங்கள் கொடுத்த எந்த வாக்குகளையும் நீங்கள் நிறைவேற்றவில்லை, உள்ளாட்சியை பயன்படுத்தினீர்கள், தேர்தலை நடத்தவில்லை, அது ஏன் என எங்களுக்கும் தெரியும், ஒன்று வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
இன்னொன்று உள்ளாட்சியில் இருக்கும் எல்லாத்தையும் சுரண்டி வீட்டிற்கு எடுத்துவிட்டு போகும் வாய்ப்பு அது தான், கொரோனா நேரத்தில் கூட எல்லாத்திலும் ஊழல் செய்த ஆட்சி உங்களுடைய ஆட்சி, எதுவுமே செய்யாத எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் மறக்கமாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நீங்கள் திமுக ஆட்சியை குறைகூற எந்த தகுதியிம் இல்லை, சட்டமன்ற தேர்தலில் வந்து சொல்லி பார்த்தனர் நாங்கள் தான் மக்களுக்கு நண்பர்கள், சகோதர்கள் என்று, ஆனா அதனை மக்கள் நம்ப தயாராக இல்லை, சிஏஏ கொண்டு வரப்பட்ட போது எங்கு போனீர்கள், அதை எதிர்த்து போராடியவர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டீர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை, விவசாயிகளுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போது அதனை ஆதரித்தது அதிமுக என்பதை மக்களும் மறக்கவில்லை, நாங்களும் மறக்கவில்லை,
இன்று தமிழகத்திற்கு நல்லது செய்பவர்கள் போல மக்கள் மீது அக்கறை இருப்பவர்கள் போல பேசினால் அதனை மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள், உள்ளாட்சியில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று கூறுகிறார், ஆனால் தேசிய அளவில் கூட்டணி தொடர்கிறது, நீட் தேர்விற்கு வேண்டுமானால் விலக்க அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு ஒத்துவரலாம், ஆனால் மற்றபடி பாஜகவிற்கும், உங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள், பாஜக மக்களை மதம், சாதியால் பிரிக்கும் மக்கள்விரோத இயக்கம், எனவே மக்கள் உங்களை நம்பமாட்டார்கள், அதே போல இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்க கூடிய தாமிரபரணி, அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செய்து முடிக்கப்பட்டு சீராக குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளிக்கிறேன்.
அதே போல ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு உங்களது சிரமங்கள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு சுகாதார குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்ற உறுதியை தெரிவித்து கொள்கிறேன், எனவே உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பாளையங்கோட்டை சமாதானபுரத்திலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்