Local body election | இன்றே கடைசி என்பதால் திருவாரூரில் மனுத்தாக்கல் செய்ய குவிந்த வேட்பாளர்கள்
நகராட்சியில் திமுக சார்பில் 24வது வார்டில் ரஜினி சின்னா மற்றும் 1-வது வார்டில் திமுக சார்பில் தொழிலதிபர் பாலமுருகனும் அவரது மனைவி கவிதா இரண்டாவது வார்டிலும் போட்டி
திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நான்கு நகராட்சி மற்றும் ஏழு பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 216 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் திருவாரூரில் உள்ள 30 வார்டுகளுக்கும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக திமுக வேட்பாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கட்சியினர் திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை வந்து ஒரே நேரத்தில் பேரணியாக வந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 100 மீட்டருக்கு முன்பு பேரணியை நிறைவு செய்து விட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒரே நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி பேரூராட்சி என மொத்தம் 216 நாடுகளில் காங்கிரசுக்கு 18 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருவாரூர் நகராட்சியில் 6 வது வார்டு மட்டும் காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் நகராட்சியில் திமுக சார்பில் 24வது வார்டில் ரஜினி சின்னா மற்றும் 1-வது வார்டில் திமுக சார்பில் தொழிலதிபர் பாலமுருகனும் அவரது மனைவி கவிதா இரண்டாவது வார்டிலும் போட்டியிடுகிறார்.அதே போன்று அதிமுக சார்பில் 1வது வார்டில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள், இரண்டாவது வார்டில் அவரது மனைவி மலர்விழி போட்டியிடுகிறார்.மேலும் திமுக சார்பில் டி.செந்தில் 14வது வார்டுக் கும்,அவரது மனைவி புவனப்பிரியா ஒன்பதாவது வார்டிலும் போட்டியிடுகின்றனர். இது இப்பகுதியில் கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனித்துப் போட்டியிடும் பாமக, பாஜக, அமமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 216 வார்டுகளுக்கு 665 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக பாஜக உள்ளிட்ட முக்கிய காட்சிகள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பறக்கும் படையினர் 18 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாள் என்பதால் 100 மீட்டருக்கு முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி வேட்பாளருடன் இருவர் மட்டுமே செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.