local body election 2022 | மேயராக வருபவர்கள் இதைச் செய்யுங்கள்.. சேலம் மாநகராட்சி மக்களின் கோரிக்கை..
சேலம் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாநகராட்சி மக்கள் கோரிக்கை.
சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி பகுதியில் 2136 ஏக்கர் பரப்பளவில் பனமரத்துப்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு ஒரு டிஎம்சி ஆகும். சேலம் நகரத்தின் தெற்கில் அமைந்துள்ள துணைநகரங்களின் நீராதாரம் இந்த ஏரியாகும். சேலம் நகரத்தின் வேடந்தாங்கல் என்று இது அழைக்கப்பட்டது. ஜருகுமலை, போதமலை இணையும் அடிவார பகுதியில் அமைந்துள்ள இந்த மிகப்பெரிய ஏரி, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா தளம் போல் விளங்கியது. இந்தப் பகுதியில் சில சினிமா படபிடிப்புகளும் நடந்து வந்தது.
சேலம் மாநகர் மக்களின் குடிநீர் தேவைக்கு, 1911 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பனமரத்துப்பட்டி ஏரியை உருவாக்கினர். அங்கிருந்து, இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், மல்லூர், பனமரத்துப்பட்டிக்கு, குடிநீர் விநியோகிக்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செழித்தது. கடந்த 1971 ஆம் ஆண்டு வரை சேலம் நகர பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பின் காரணமாக ஏரியின் பரப்பளவு குறைந்ததோடு, ஏரிக்கு தண்ணீர் வரும் நீர் வழித் தடங்களும், ஆக்கிரமிக்கப்பட்டதால் மலைப் பகுதியில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் ஏரிக்கு வராத நிலை ஏற்பட்டது. இதனால் ஏரிப் பகுதி வறண்டதோடு, சீமை கருவேல முள் மரங்கள் முளைத்து, புதர் மண்டிக் கிடந்தது.
மழையின்றி வறண்ட ஏரி, 20 ஆண்டுகளாக, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது. 2005 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றியபின், ஏரியில் தண்ணீர் நிரம்பியது. பின், மழையின்றி வறண்டு, சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, முட்புதராக காட்சியளிக்கிறது. கடந்த, 2001 தேர்தலில் போட்டியிட்டவர்கள் பனமரத்துப்பட்டி ஏரியில் சுற்றுலா தலம் அமைக்கப்படும் என, வாக்குறுதி அளித்தும், திட்டம் நிறைவேற்றப்படவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்ற, 2016 ஆம் ஆண்டு, சேலம் மாநகராட்சி நிர்வாகம், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியது. ஆனால், ஒப்பந்ததாரர்கள், வேருடன் அகற்றாமல் விட்டதால், மீண்டும் வளர்ந்து, முட்புதராக காட்சியளிக்கிறது. ஏரியிலுள்ள, பல லட்சம் சீமை கருவேல மரங்கள், தினமும், பல கோடி லிட்டர் நிலத்தடிநீரை உறிஞ்சுகின்றன. இதனால், 1,000 அடி ஆழத்தில், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி தண்ணீர் தேக்கி வைத்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சேலம் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாநகராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.