IPL 2024: இன்னும் ஒரு சதம்தான்! மும்பை இந்தியன்ஸின் முடிசூடா மன்னனாக வரலாறு படைப்பார் ரோஹித் சர்மா..!
ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 6 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவர். குறிப்பாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓப்பனிங் செய்து எதிரணி வீரர்களை பலமுறை கலங்கடித்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதத்தையும், டி20 போட்டிகளில் 5 சதத்தையும் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா இன்றுவரை 243 போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 6,211 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா கடந்த 2013ம் ஆண்டு முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்தார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில், மும்பை அணிக்கு தலைமை தாங்கி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒன்றாக மாற்றியுள்ளார். இப்போது ஐபிஎல் 2024ல் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா செய்யக்கூடிய சாதனை ஒன்று உள்ளது.
ரோஹித் சர்மா படைப்பாரா சாதனை..?
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியனாக இருந்தாலும், இந்த அணியில் இருந்து 6 பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதம் அடித்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சனத் ஜெயசூர்யா கடந்த 2008ம் ஆண்டு முதல் சதம் அடித்த வீரர் ஆவார். அவரைத் தொடர்ந்து இந்த அணிக்காக சச்சின் டெண்டுல்கர், லெண்டல் சிம்மன்ஸ், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோரும் சதம் அடித்துள்ளனர். ஆனால் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த வீரர்கள் அனைவரும் மும்பை அணிக்காக தலா ஒரு சதம் விளையாடியுள்ளனர்.
இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2 சதங்கள் அடித்த எந்த வீரரும் வரலாற்றில் இல்லை. ஆனால், வருகின்ற ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 109 ரன்கள் எடுத்த ஒரே சதம்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனை விராட் கோலி பெயரில் உள்ளது. இவர் இதுவரை பெங்களூரு அணிக்காக 7 சதங்கள் அடித்துள்ளார். அவருக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 6 சதங்களுடனும், ஜாஸ் பட்லர் 5 சதங்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்த இந்தியர் என்ற சாதனை பட்டியலில் விராட் கோலிக்கு பிறகு கே.எல்.ராகுல் 4 சதமும், சுப்மன் கில் 3 சதங்கள் அடித்துள்ளனர்.
ரோஹித் சர்மாவின் மேலும் ஒரு சாதனை:
ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 6 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை வென்றபோது அந்த அணியில் இருந்தார். அதனைதொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. அதன்பிறகு 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளிலும் இவரது தலைமையில் மும்பை அணி கோப்பையை வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடுவும் ஆறு முறை ஐபிஎல் வென்ற அணிகளில் இருந்துள்ளார். அம்பதி ராயுடு 2013, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணியிலும், 1018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணியிலும் கோப்பை வென்றிருந்த அணியில் இடம் பிடித்திருந்தார். எனவே இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது பட்டத்தை வென்றால், அதிக ஐபிஎல் பட்டங்களை வென்ற அணியில் இடம் பிடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைப்பார்.