Lok Sabha Results 2024: இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி! சுயேச்சையாக வென்ற அந்த 7 பேர்
Lok Sabha Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் முன்னணி கட்சிகளின் வேட்பாளர்களை வீழ்த்தி, சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
![Lok Sabha Results 2024: இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி! சுயேச்சையாக வென்ற அந்த 7 பேர் Independents Engineer Rashid, Amritpal Singh, Indira Gandhi’s assassin’s son Sarabjeet Singh Khalsa won election 2024 Lok Sabha Results 2024: இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி! சுயேச்சையாக வென்ற அந்த 7 பேர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/05/ff90bfd5896e589a308c6f65862b7a031717557203763732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Lok Sabha Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற நபரின் மகன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
கடந்த இரண்டு மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்த நெருங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290+ இடங்களையும், காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230+ இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கே ஆச்சரியம் அளிக்கும் வகையில், சில தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்று அசத்தியுள்ளனர்.
1. இன்ஜினியர் ரஷித் - பாராமுல்லா தொகுதி:
உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவரரான இன்ஜினியர் ரஷீத், மும்முனைப்போட்டிக்கு மத்தியிலும் பாராமுல்லா தொகுதியில் 2 லட்சத்து நான்காயிரத்து 142 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிலும் ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான ஒமர் அப்துல்லாவை வீழ்த்தி அவர் இந்த வெற்றியை ஈட்டியுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெற்ற இவர், தீவிரவாதிகளுக்கு உதவியதாக கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்தபடியே பரப்புரை மேற்கொண்டு ரஷித் வெற்றி பெற்றுள்ளார்.
2. விஷால் பிரகாஷ்பாபு பட்டீல் - சாங்லி தொகுதி:
மகாராஷ்டிர மாநில மறைந்த முன்னாள் முதலமைச்சர் வசந்ததாதா பாட்டீலின் பேரன் விஷால், சாங்லி மக்களவைத் தொகுதியில் தனித்து நின்று போட்டியிட்டு தனது செல்வாக்கால் வெற்றி வாகை சூடியுள்ளார். எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளரை காட்டிலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
3. அம்ரித்பால் சிங் - கதூர் சாஹிப் தொகுதி:
தீவிர சீக்கிய மத போதகரான அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநிலம் கதூர் சாஹிப் தொகுதியில் காங்கிரஸின் குல்பீர் சிங் ஜிராவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாமின் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காலிஸ்தானி ஆதரவு தலைவரான இவர், 1 லட்சத்து 97 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
4. இந்திராகாந்தியை கொன்றவரின் மகன் வெற்றி:
பஞ்சாப் மாநில ஃபரித்கோட்டில் சரப்ஜீத் சிங் கல்சா 70,000 வாக்குகள் வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் கரம்ஜித் சிங் அன்மோலை வீழ்த்தியுள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த இருவரில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் தான் சரப்ஜித் சிங் என்பவர் குறிப்பிடத்தக்கது. தேர்தல் பரப்புரையின் போது, சீக்கிய வேதமான குரு கிரந்த் சாஹிப் இழிவுபடுத்தப்பட்ட 2015 படுகொலை சம்பவங்கள் பற்றிய பிரச்சினையை எழுப்பினார்.
5. படேல் உமேஷ் பாய் - டையு & டாமன் தொகுதி
சுயேச்சை வேட்பாளர் பட்டேல் உமேஷ்பாய் பாபுபாய், பாஜகவின் லாலுபாய் பாபுபாய் படேலை எதிர்த்து 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அங்கு தோல்வியை தழுவியுள்ளது.
6. மொகமது ஹனிஃபா - லடாக் தொகுதி:
லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா 27,906 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் போட்டியாளரான செரிங் நம்கியாலை தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் அங்கு பிரபலமான ஷியா மத குரு தலைவராகவு உள்ளார்.
7. ராஜேஷ் ரஞ்சன் - பூர்னியா தொகுதி:
ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் பீகாரின் பூர்னியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சந்தோஷ் குமாரை வீழ்த்தினார். தனித்து கட்சி நடத்தி வந்த அவர், அண்மையில் அதனை காங்கிரஸில் இணைத்தார். ஆனாலும், தனக்கு சீட் ஒதுக்கப்படாததால், தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)