கோவையில் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்
அதிக அளவில் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வருவதாகவும், அதனால் சாக்கடையை சுத்தம் செய்ததாக மகேஸ்வரன் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து வாக்கு சேகரித்தார்.
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரன் போட்டியிடுகிறார். இவர் குதிரையில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். அப்போது குதிரை போல மக்களுக்காக வேகமாக வேலை செய்வேன் என அவர் தெரிவித்தார். இதையடுத்து கடந்த வாரம் கண்ணப்ப நகர் பகுதியில் ஆர்மோனியம் பெட்டியை தோளில் மாட்டியபடி, வீடு வீடாக சென்ற மகேஸ்வரன் ஆர்மோனியம் வாசித்தபடியும், பாடல்களை பாடியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து நூதன முறையில் பரப்புரையில் ஈடுபட்டு வந்த மகேஸ்வரன், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று மகேஸ்வரன் சங்கனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாக்கடையில் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியில் அதிக அளவில் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வருவதாகவும், அதனால் சாக்கடையை சுத்தம் செய்ததாக மகேஸ்வரன் தெரிவித்தார். தான் வெற்றி பெற்றால் சாக்கடை பிரச்சனைகளை சரி செய்வதோடு, மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்