DMK Manifesto: நீட், புதிய கல்விக்கொள்கை ரத்து; நாடு முழுவதும் காலை உணவுத்திட்டம்- திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்ன?
DMK Manifesto 2024: மக்களவைத் தேர்தலுக்காக திமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் கல்வி சார்ந்தும் மாணவர்கள் சார்ந்தும் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் இவைதான்!
DMK Lok Sabha Election Manifesto 2024: மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடந்து வரும் நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், திமுக கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
கல்வி சார்ந்தும் மாணவர்கள் சார்ந்தும் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் இவைதான்!
* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
* மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படும்.
* புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்
* நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
* மத்திய அரசு பணிகளில் தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும்.
* மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
* இலவச, தரமான, கட்டாய, குழந்தை நேயக் கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே, அவர்களின் தாய்மொழியில் கிடைக்கவும் 18 வயது அல்லது 12ம் வகுப்பு வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் நீட்டித்து, கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
* அதிகரித்து வரும் வளரிளம் பருவத்தினரின் தற்கொலை விகிதங்களைத் தடுப்பதற்கும், மாணவர்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்துவதற்கும் விரிவான மனநலத் திட்டங்கள் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வழிவகுக்கப்படும்.
* பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் குடும்பச்சூழலை அறிந்து தேவையான பொருளாதார வாய்ப்பினை அளித்து அவர்கள் நிரந்தரமாகப் பள்ளிக் கல்வி பயில்வது உறுதி செய்யப்படும்.
* தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளில் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் வாய்ப்பு அளிக்க திமுக குரல் கொடுக்கும்.
* இந்தியாவிற்கு முன்னோடித் திட்டமான “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
* சென்னையில் உள்ளதுபோல் இந்திய தொழில்நுட்பக் கழகம் மதுரையிலும், இந்திய மேலாண்மைக் கழகம் கோவையிலும் அமைக்கப்படும்.
* 5000 இளம் அறிவியல் வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை உருவாக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* இவைதவிர இந்தியா முழுவதும் உள்ள மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.500 , பெட்ரோல் 75, டீசல் 65 ரூபாய்களாகக் குறைக்கப்படும்.
இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.