Lok Sabha Election 2024: முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 195 வேட்பாளர்கள்; தமிழ்நாடு லிஸ்டில் இல்லை.. பாஜக ப்ளான் என்ன?
Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலுக்கு பாஜக முதற்கட்டமாக 195 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி என்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களாக 195 வேட்பாளர்கள் பெயரையும் அவர்கள் எங்கு போட்டியிடுகின்றனர் என்பது குறித்தும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் தமிழ்நாடு குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இடம் பெறவில்லை. தமிழ்நாடு இராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவுள்ளதாக பேச்சுகள் அடிப்பட்டு வந்தது. அனால் இந்த அறிவிப்பில் பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிடவுள்ளார் என அறிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் பிரதமர் மோடி வாரணாசியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இந்த முதற்கட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நேற்று அதாவது மார்ச் ஒன்றாம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை தமிழ்நாடு பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
தமிழ்நாட்டில் பாஜக இன்னும் கூட்டணியை உறுதி செய்யாததால் தமிழ்நாடு குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வெளியாகவில்லை எனக் கூறப்படுகின்றது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்களாக பார்க்கப்படுவது, அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், குஷ்பு, வினோஜ் பி. செல்வம், ஹெச். ராஜா, கரு. நாகராஜன் மற்றும் விஜயதாரணி ஆகியோர்தான். இவர்கள் போட்டியிடுவார்களா அல்லது பாஜக இவர்களுக்கு வேறு எதாவது திட்டம் வைத்துள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்த முதற்கட்ட அறிவிப்பில் அதிகமாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் 51 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்து மத்திய பிரதேசத்தில் 24 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் மேற்கு வங்கத்தில் 20 தொகுதிகளுக்கு வேட்பாளார்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன் பின்னர் குஜராத் 15 தொகுதிகளும், கேரளா 12 தொகுதிகளும், அசாம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 11 தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தெலுங்கானாவுக்கு 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியைப் பொறுத்தவரை முதற்கட்டமான 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மிர் மற்றும் அருணாசால பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் யூனியன் பிரதேசங்களில் கோவா, அந்தமான் மற்றும் டையூ டாமனுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திரிபுரா மாநிலத்தில் ஒரு தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 34 மத்திய மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். பெண்வேட்பாளர்கள் 28 பேரும், இளம் வேட்பாளர்கள் 47 பேரும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.