Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியுள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Bihar Election 2025 Result: பீகாஎர் சட்டமன்ற தேர்தல் முடிவில் பாஜக, அந்த மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
என்டிஏ கூட்டணி அமோக வெற்றி:
தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, பரபரப்புக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 243 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெல்லப்பட்டன. அதில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் சொன்னதுபோலவே, பாஜக மற்றும் நிதிஷ்குமார் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், யாரும் எதிர்பார்க்காத வகையில் 200-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்து ஆச்சரியமளித்துள்ளது.
எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?
என்டிஏ கூட்டணியின் பிரதான கட்சிகளான பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இந்த தேர்தலில் தலா 101 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில், பாஜக 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நிதிஷ்குமார் கட்சி 75 இடங்களிலும், பாஜக 74 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி 28 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் வெற்றி பெற்று பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜித்தம் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா 5 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் நிலை என்ன?
சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என கருதப்பட்ட நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய கூட்டணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. குறிப்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களிலும், 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களிலும், இடதுசாரிகள் 3 இடங்களிலும் மற்றும் இந்திய ஒருங்கிணைந்த கட்சி ஒரே ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி 110 இடங்களை வென்று இருந்த நிலையில் தற்போது அது வெறும் 35 இடங்களாக சுருங்கியுள்ளது.
சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
தேர்தல் அறிவித்த உடனே எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய அசாதுதின் ஓவைசி விருப்பம் தெரிவித்தார். ஆனால், தேஜஸ்வி யாதவ் அதனை விரும்பவில்லை. இதையடுத்து 25 தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை களமிறக்கியது. அதன் முடிவில் 5 இடங்களில் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. கூட்டணி அமைத்து களம் கண்ட காங்கிரஸால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கூடுதலாக வெற்றி பெற முடிந்துள்ளது.பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு ஓவைசி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பிரித்த ஓட்டுகளே காரணம் என கூறப்படுகிறது. இதுபோக பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கட்சி வாரியாக வெற்றி பெற்ற இடங்கள்:
- பாஜக - 89 தொகுதிகள்
- ஜேடியு - 85 தொகுதிகள்
- ஆர்ஜேடி - 25 தொகுதிகள்
- எல்ஜேபிஆர் - 19 தொகுதிகள்
- காங்கிரஸ் -6தொகுதிகள்
- எச்எஎம் - 5 தொகுதிகள்
- ஓவைசியின் கட்சி - 5 தொகுதிகள்
- ஆர்எல்எம் - 4 தொகுதிகள்
- இடதுசாரிகள் - 3 தொகுதிகள்
- IIP, BSP - 1 தொகுதி





















