Election Results 2022: தடுமாறும் தலைமை.. உட்கட்சி பூசல்.. ஆளும் எண்ணிக்கை இரண்டு! நொறுங்கும் காங்கிரஸ்.!
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி இன்று தனது ஆட்சியை இழந்தது மூலம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3 லிருந்து 2 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் மிகவும் பழமையான கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சி, இன்று நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்து மீண்டும் ஒரு அடி சறுக்கியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி இன்று தனது ஆட்சியை இழந்தது மூலம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3 லிருந்து 2 ஆக குறைந்துள்ளது.
இந்தியா முழுவதும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது.
அதேபோல், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரிதாக தனது பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பாஜக அமோக வெற்றியைப் பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்தைப் பிடித்தது.
கோவாவில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை முற்றிலும் மங்கிப்போனது. அங்கும் பிஜேபி கட்சியே கிட்டத்தட்ட ஆட்சியை கைப்பற்றும் நிலையில் நீடித்து வருகிறது.
#Elections2022 | காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 2 ஆக குறைகிறது https://t.co/wupaoCQKa2 | #PunjabElections2022 #Congress #Punjab #RahulGandhi pic.twitter.com/KJpPUxOQHu
— ABP Nadu (@abpnadu) March 10, 2022
பஞ்சாபில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த காரணம் என்ன ?
பஞ்சாபை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டுவரை தனது நிலைப்பாட்டிலும், ஆட்சியிலும் வலுவான நிலையை பெற்றிருந்தது. அதன்பிறகு, விவசாயிகள் போராட்டம், உட்கட்சி பூசல் என்று காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் சின்னாபின்னமாகியது.
தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அதன் முதலமைச்சரை மாற்றியது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி விவசாயிகள் போராட்டத்தில் முன்நிற்க, அதுவே ஆம் ஆத்மி பஞ்சாபில் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தது.
முன்னதாக, 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸை 2-வது இடத்திற்குத் தள்ளி, மாநிலத்தில் தனது இருப்பை நிலைநிறுத்திய அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சிக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கணித்திருந்தன.
ஒரு வருடத்திற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு முக்கிய காரணமாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரானநவ்ஜோத் சித்து இடையேயான சண்டையே முக்கிய காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்து கணிப்பு கூறியது என்ன..?
தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறியதாவது, கட்சித் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் என்றும், 'எங்கள் போராட்டம் இப்போதுதான் தொடங்கிவிட்டது' என்றார். மேலும், 'புதிய ஆற்றலுடன் நாம் முன்னேற வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்தார். இந்தநிலையில், 5 மாநில தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளது. abp வெளியிட்ட எக்சிட் போல் கணித்துள்ள நிலையில், உ.பி., மணிப்பூர், மற்றும் கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை ஆளும் பாஜக தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவித்தது. அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை அமைக்கும் என்று தகவல் தெரிவித்தது. அதுவே, தற்போது உறுதியாகியுள்ளது.