Best College: இதை கட்டாயம் செக் பண்ணுங்க! பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சிறந்த கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?
யார் என்ன சொன்னாலும் அதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து முடிவெடுங்கள். 80 சதவீதம் கல்லூரிக்கு முடிவு முக்கியத்துவம் கொடுங்கள். அடுத்ததாகப் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஒவ்வொரு மாணவருக்கும் பள்ளிப் படிப்புக்குப் பிறகு படிக்க வேண்டிய படிப்பையும் சேர வேண்டிய கல்லூரியையும் தேர்வு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. இதுவே அவர்களின் எதிர்காலம் எப்படி மாறும் என்பதை நிர்ணயிக்கும் என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
இந்த நிலையில், கல்லூரிகளை ஒரு மாணவர் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து மூத்த கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஏபிபி நாடு இணையதளத்திடம் விரிவாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நம் உயர்கல்வி குறித்த முடிவை எடுப்பதில் நம்மை திசை திருப்புபவர்கள் மூன்று பேர்.
முதலாவது உறவினர்கள்,
இரண்டாவது நண்பர்கள்,
மூன்றாவது யூடியூப் இன்புளுயன்சர்கள்.
யார் என்ன சொன்னாலும் அதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து முடிவெடுங்கள். 80 சதவீதம் கல்லூரிக்கு முடிவு முக்கியத்துவம் கொடுங்கள். அடுத்ததாகப் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?
சம்பந்தப்பட்ட கல்லூரி என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில் இருக்கிறதா என்று பாருங்கள். மத்திய அரசு இணையதளத்தில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என பல்வேறு படிப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும். அதை அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பார்த்து சரி பார்க்கவும்
ஏனெனில் என்ஐஆர்எஃப் தரவரிசை இருக்கும் கல்லூரிக்கு உயர் கல்விக்கு செல்லவோ வேலைவாய்ப்புக்கோ தனி மதிப்பு இருக்கிறது. அதேபோல தரவரிசைப் பட்டியலில் எந்த இடத்தில் இருந்தாலும் பரவாயில்லை, மேலே கீழே என்று வித்தியாசம் பார்க்க தேவையில்லை.
அங்கீகாரம் அவசியம் சாரே...
அடுத்ததாக தன்னாட்சி பெற்ற கல்லூரியா என்று பாருங்கள். NAAC, NBA உள்ளிட்ட அங்கீகாரம் பெற்ற கல்லூரியா என்றும் சோதித்துக் கொள்ளலாம். தொடர்ந்து என்ன மாதிரியான சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் உள்ளது? என்னென்ன கற்பித்தல் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்க வேண்டும்.
அதேபோல ஒரு கல்லூரியை தேர்வு செய்யும்பொழுது, அதன் சமூக வலைதள பக்கங்களைப் பாருங்கள். அதில் பதிவிட்டுள்ள பதிவுகளை பாருங்கள். அதில், என்ன மாதிரியான நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்துகிறார்கள் என்று பாருங்கள். கல்விக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா என ஆய்வு செய்யுங்கள்.

பாடத்திட்டம், பிளேஸ்மெண்ட் ரெக்கார்ட் பாருங்கள்..
தொடர்ந்து பாடத்திட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அதை கல்லூரிகளின் இணையதளத்தில் தரவிறக்கம் செய்யுங்கள். பாடத்திட்டத்தில் என்னென்ன உள்ளடக்கம் இருக்கிறது? படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும்பொழுது வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமா? என்று பாருங்கள்.
அடுத்தபடியாக அவர்களுடைய பிளேஸ்மெண்ட் ரெக்கார்ட் என்ன என்று பார்க்க வேண்டும். அவர்களின் வேலை வாய்ப்பு குறித்த தரவுகள், வாக்குறுதிகளைத் தேடி எடுங்கள். இதுவரை என்னென்ன நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்து சென்றுள்ளன? அவர்கள் என்ன மாதிரியான வேலை வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள்? என்று சோதித்துப் பாருங்கள். புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் டை- அப் வைத்திருக்கிறோம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். யாராவது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று அதை உறுதி செய்திருக்கிறோமா?
கல்லூரிகள் சொல்வதை ஒரு முறைக்கு இருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள்’’ என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
வானமே எல்லை நிகழ்ச்சியில் கல்லூரிகள், படிப்பைத் தேர்வு செய்வது குறித்த வீடியோவை முழுமையாகக் காணலாம்.





















