UGC Update: இதைச் செய்யாத பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் செல்லாது; அங்கீகாரமே ரத்து- யுஜிசி எச்சரிக்கை!
UGC New Regulations: விதிகளைப் பின்பற்றாத பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும், யுஜிசி திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.
துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் நியமனத்தில் யுஜிசி உருவாக்க உள்ள விதிகளைப் பின்பற்ற மறுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பட்டம் வழங்கும் உரிமையும், அங்கீகாரமும் பறிக்கப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுஜிசி புதிய வரைவு அறிக்கை நேற்று முன்தினம் (ஜனவரி 6) வெளியிடப்பட்டது. குறிப்பாக யுஜிசி (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) வரைவு விதிமுறைகள் வெளியாகின.
துணைவேந்தர் நியமனத்தில் மாற்றம்
இதில் துணை வேந்தர் நியமனம் குறித்த புதிய பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவின் (Search- cum- Selection Committee) தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக சிண்டிகேட் அல்லது செனட் அல்லது நிர்வாகக் குழு அல்லது மேலாண்மை உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்றும் யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநில அரசின் பிரதிநிதித்துவம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதாவது மாநில அரசின் பிரதிநிதிகள், துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவில் இருக்க மாட்டார்கள்.
கல்வியாளர்கள் அல்லாதோருக்கும் அனுமதி
அதேபோல கல்வியாளர்கள் மட்டுமின்றி, பொது நிர்வாகத் துறையில் அனுபவம் பெற்றவர்களும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படலாம் என்றும் மானியக்குழு விதிகளில் கூறப்பட்டுள்ளது. இவற்றுக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேலும் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு கட்டாயத் தகுதித் தேர்வு இல்லை என்றும் பிற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை முடித்து வேறொரு துறையில் பிஎச்.டி. முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் 28 வகையான விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்களிடம் யுஜிசி அமைக்கும் விசாரணைக் குழு விசாரணை நடத்தும். அதில், உண்மை கண்டறியப்பட்டால்,
- பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் (Sections 2(f) and 12B of UGC Act 1956 கீழ்).
- பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும்.
- பல்கலை. மானியக் குழுவின் திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.
- திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு முறையிலும், ஆன்லைன் வாயிலாகவும் பட்டப் படிப்புகளை (ODL and online mode) நடத்துவதற்கு தடை விதிக்கப்படும்
என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவத்தைப் பொறுத்து கூடுதல் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்பட்டமான அதிகார அத்துமீறல்
எனினும் இவை அனைத்தும் அப்பட்டமான அதிகார அத்துமீறல் என்று கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.