Group 2 Free Coaching: குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு உடனடி பயிற்சி; தமிழக அரசு அறிவிப்பு- பங்கேற்பது எப்படி?
TNPSC Group 2 2A Free Coaching: குரூப் 2, 2ஏ தேர்வுக்கு எல்லோரும் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், கிராஷ் கோர்ஸ் எனப்படும் உடனடிப் பயிற்சியை அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு க்ராஷ் கோர்ஸ் எனப்படும் உடனடிப் பயிற்சியைத் தமிழக அரசு வழங்க உள்ளது.
2030 காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை நடத்தி, அரசுக்குத் தேவையான தகுதிவாய்ந்த அலுவலர்களைத் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக, குரூப் 2 பிரிவில் 507 இடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளன. தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
செப்டம்பர் 14ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு
இந்த நிலையில், தேர்வர்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பித்து வந்தனர். கட்டணம் செலுத்துவதற்கும் ஜூலை 19ம் தேதியே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
நேரலை நிகழ்ச்சிகள்
தேர்வுக்கு எல்லோரும் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், கிராஷ் கோர்ஸ் எனப்படும் உடனடிப் பயிற்சியை அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதில் லைவ் செஷன் எனப்படும் நேரலை நிகழ்ச்சிகளும் கடந்த ஆண்டு வினாத்தாளை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. இவை அனைத்தும் தமிழக அரசின் அண்ணா நிர்வாகப் பயிற்சிக் கல்லூரி சார்பில் எய்ம் டிஎன் எனப்படும் யூடியூப் பக்கத்தில் வழங்கப்பட உள்ளன.
இவற்றை https://www.youtube.com/@aimtn/featured என்ற யூடியூப் பக்கத்தில் காணலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.