College Admission: பேராவூரணி கலை, அறிவியல் கல்லூரியில் நாளை 31ம் தேதி மாணவர் சேர்க்கை தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 31ம் தேதி மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 31ம் தேதி மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச்சில் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் (பொ) ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2023-24 கல்வி ஆண்டிற்கு இணைய வழி மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 31 ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதல் நாளில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
ஜூன் 2ம் தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 3ஆம் தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5ஆம் தேதி பி. ஏ. , தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும்போது உரிய மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்கள், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள், 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். கலந்தாய்வில் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பிறகு வேறு பாட பிரிவிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பின்னர் வேறு பாடப் பிரிவிற்கு மாற்றம் செய்ய அனுமதிக்க இயலாது. கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.