TN 12th Result 2025: பிளஸ்-2 பொதுத் தேர்வில் சேலம் மாவட்டம் 94.32% தேர்ச்சி... மத்திய சிறையில் சிறைவாசிகள் சாதனை
மாணவர்கள் 89.17 சதவீதமும், மாணவிகள் 94.56 சதவீதமும் என, சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்து 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 13 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின் 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாக உள்ளன. மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்தது. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடந்தது.
சேலம் மாவட்ட தேர்ச்சி விவரம்:
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வில் 320 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 17,185 மாணவர்கள், 19,709 மாணவிகள் என மொத்தம் 36,894 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 15,876 பேரும், மாணவிகள் 18,921 பேரும் என மொத்தம் 34,797 பேர் தேர்வாகியுள்ளனர். நடப்பாண்டு சேலம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 94.32 ஆக உள்ளது. இதில் மாணவர்கள் 92.38 சதவீதமும், மாணவிகள் 96 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்ட முழுவதும் 89 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
13 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி:
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 160 பள்ளிகளைச் சேர்ந்த 8,672 மாணவர்கள், 11,801 மாணவிகள் என மொத்தம் 20,473 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 7,733 பேர் மாணவிகள் 11,159 பேர் என, மொத்தம் 18,892 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.17 சதவீதமும், மாணவிகள் 94.56 சதவீதமும் என, சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்து 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 13 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
சிறைவாசிகள் 100% தேர்ச்சி:
சேலம் மத்தியசிறையில் 8 சிறைவாசிகள், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.இதில் எட்டு பேரும் தேர்ச்சி பெற்று சேலம் மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக சேலம் மத்தியசிறையில் எட்டு சிறைவாசிகளில் கனிவளவன் 511 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.





















