தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்ஆணை மங்கலம் கிராமத்திற்கு மின்சார வசதி இல்லாததால் அப்பகுதி மாணவர்கள் தெரு விளக்கில் அமர்ந்து படிக்கும் அவலம் உண்டாகியள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது செங்கம். இந்த பகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மேல் ஆணைமங்கலம். இந்த கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 30 குடும்பங்கள் வீடுகளில் வசித்து வந்தாலும் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு இன்றளவும் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை.
தெருவிளக்கில் படிக்கும் மாணவர்கள்:
வீடுகளுக்கு மின்சார விநியோகம் இல்லாததால் இந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், அந்த கிராமத்தில் அமைந்துள்ள தெரு விளக்குகளின் வெளிச்சத்தில்தான் தினசரி படித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தெரு விளக்கில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் அந்த பெண்ணின் சித்தி இங்கயா உக்காந்து படிக்குறீங்க? ஊருக்குள்ள கரண்ட் இல்லயா? என்று கேட்கிறார்.
அதற்கு அந்த மாணவி தினமும் இங்கதான் உக்காந்து படிக்குறோம். உங்களுக்குத் தெரியாதா? டெய்லியும் இங்கதான் உக்காந்து படிக்குறோம். என்ன பண்றது? இந்த ஊருக்கு யாரு கரண்ட் கொடுப்பாங்க? 11வது படிக்குறேன். இன்னும் பசங்க எல்லாரும் படிக்க வருவாங்க என்று அந்த மாணவி கூறினார்.
அதற்கு அந்த பெண் ஏன் அரசாங்கத்திடம் கூற வேண்டியதுதானே கரண்ட் இல்லை என்று? என கேட்கிறார். அதற்கு அந்த மாணவி சொன்னோம். ஏதும் செய்யவில்லை. கலெக்டர் ஆபீஸ்க்கு போயி எழுதி வச்சுட்டு வந்தோம். ஏதும் பண்ணவே இல்லை.
என்று வேதனையுடன் கூறுகிறார்.
View this post on Instagram
ஏன் மின்சாரம் இல்லை?
இந்த மேல் ஆணை மங்கலம் கிராமம் ஏரிப்பகுதியில் அமைந்திருப்பதாலும், புறம்போக்கு நிலம் என்பதாலும் அரசு சார்பில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், இந்த மக்கள் நீண்ட காலமாக இதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். பொதுத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளின்போது இந்த தெரு விளக்கிலே அமர்ந்து படித்து வருகின்றனர். மழைக்காலம் என்றால் வீடுகளில் விளக்குகளை ஏற்றி படித்து வருகின்றனர். மின்சார வசதி இல்லாததால் மழைக்காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் இந்த கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஒளியேற்றுமா தமிழக அரசு?
மேலும், சாலை வசதியும் இல்லாததால் இந்த பகுதி மக்கள் ஏதேனும் மருத்துவ அவசரத்திற்கும் நகர்ப்புறத்திற்கு செல்வதற்கு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த கிராம மக்கள் தங்களுக்கு அரசு விரைந்து மின்சார வசதி செய்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் எந்த கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். குறிப்பாக, அனைத்து குழந்தைகளும் தடையின்றி பள்ளிகளில் படிப்பதற்காக பல்வேற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், இன்னும் சில குக்கிராமங்களில் போதியளவு மின்சார வசதி கிடைக்காததால் பல மாணவர்கள் கல்வி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது மின்சார வசதி இல்லாததால் தெருவிளக்கில் படித்து வரும் மேல் ஆணைமங்கலம் கிராம மாணவர்களின் வாழ்வில் தமிழக அரசு விளக்கேற்ற வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





















