தஞ்சை மாவட்ட மாணவிகளே... உங்கள் கவனத்திற்கு: என்ன விஷயம் தெரியுங்களா?
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட மாணவிகளே உங்கள் கவனத்திற்கு... இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கறாங்க. மிஸ் பண்ணாதீங்க...
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கி உள்ளன. வரும் 27.05.2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இக்கல்லூரியில் கற்பிக்கப்படும் இளநிலை பாடங்களான பிஏ தமிழ், பி ஏ ஆங்கிலம், பி ஏ வரலாறு ( தமிழ் மற்றும் ஆங்கில வழி) பி ஏ பொருளாதாரம் ( தமிழ் மற்றும் ஆங்கில வழி), பி.காம், பிபிஏ, பிஎஸ்சி கணிதம் ( தமிழ் மற்றும் ஆங்கில வழி) இயற்பியல்( தமிழ் மற்றும் ஆங்கில வழி) வேதியியல் ( தமிழ் மற்றும் ஆங்கில வழி) விலங்கியல் ( தமிழ் மற்றும் ஆங்கில வழி) தாவரவியல் ( தமிழ் மற்றும் ஆங்கில வழி), கணினி அறிவியல், புள்ளியியல், புவியியல்( தமிழ் மற்றும் ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்புகின்ற மாணவிகள் www. tngasa.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் சுழற்சி இரண்டில் பி. காம், பி.எஸ்ஸி கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இவ்வாண்டு மாணவிகள் நலன் கருதி இரண்டாம் சுழற்சியிலும் பி.எஸ்சி வேதியியல், பி.எஸ்சி விலங்கியல், பி.எஸ்சி தாவரவியல், ஆகிய பாடப்பிரிவுகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தலா 40 இடங்களுடன் புதிய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிபிஏ பாடப்பிரிவில் 60 இடங்களுடன் இரண்டாம் சுழற்சியில் கூடுதல் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தாண்டு முதல் மேலும் 300 பேர் கல்லூரியில் சேர்வதற்கு அனுமதிக்கப்படுவர். இதனால் இந்தாண்டு இக்கல்லூரியில் மொத்த மாணவியர் சேர்க்கைக்கான இடங்கள் 1564 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரே விண்ணப்பத்தில் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கும் அவற்றில் உள்ள தகுதியுள்ள பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 + பதிவுக்கட்டணம் ரூ.2 பற்று அட்டை வழிச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.
மாணவிகளுக்கு விண்ணப்பிக்க உதவி செய்வதற்காக கல்லூரி வளாகத்தில் மாணவ சேர்க்கை உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது. மாணவிகள் இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்துக் கல்லூரிகளிலும் செயல்படும மாணவர் சேர்க்கை மையத்தை நாடி, எந்த அரசு கல்லூரிக்கும் மாணவிகள் விண்ணப்பிக்க முடியும். 27.05.2025 வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களைக் கல்லூரியில் செயல்படும் மாணவர் சேர்க்கை உதவிமையப் பொறுப்பாளர்கள் முனைவர் இந்திரகலா, முனைவர் சரபோஜி, மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் தமிழ்ச் செல்வி ஆகியோரை கல்லூரி வேலை நேரத்தில் நேரில் சந்தித்து அறிந்து கொள்ளலாம். எனவே தஞ்சை மாவட்ட மாணவிகள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வரும் 27ம் தேதி வரைதான் விண்ணப்பிக்கலாம். எனவே கால தாமதம் செய்யாமல் உங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பிச்சிடுங்க.





















