ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள்; தங்கள் குழந்தைகளைவிட மாணவர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள்- அன்பில் மகேஸ்
மாணவர்களான உங்களுக்கு 10ம் வகுப்பும், 12ம் வகுப்பும் முக்கியமாக காலமாகும். 10ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் நல்ல குரூப்பும், 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் நல்ல கல்லுாரியும் கிடைக்கும்.
ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள் எனவும் அவர்கள் தங்களின் குழந்தைகளைவிட உங்களிடம்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி மாவட்ட அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களை பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள 10ம் ஆங்கில வழி வகுப்புக்கு சென்று மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துரையாடினார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் பேசுகையில் ‘மாணவர்களான உங்களுக்கு 10ம் வகுப்பும், 12ம் வகுப்பும் முக்கியமாக காலமாகும். 10ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் நல்ல குரூப்பும், 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் நல்ல கல்லுாரியும் கிடைக்கும். வாழ்க்கையில் 9ம் வகுப்பு வரை எப்படி இருந்தாலும், அதன்பின் 6 ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் பெற்றோர்கள் உங்களை சுமந்து படிக்க வைத்ததுபோல், நீங்கள் அவர்களை சுமந்து பொறுப்பானவர்களாக ஆகலாம்.
ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள். அவர்கள் உங்கள் மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லாதவர்கள். அவர்களின் குழந்தைகளைவிட உங்களிடம்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். ஒவ்வொரு தேர்வையும் இறுதித் தேர்வாக கருதி தேர்வு எழுதவேண்டும்’. என்றார்.
இது குறித்து தனது x தளத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு செய்து உள்ளார். ’’1906ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு, 1918ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து இன்று மேனிலைப்பள்ளியாக கல்விப் பணியாற்றும் கோவில்பட்டி வ.உ.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ் 80ஆவது ஆய்வை மேற்கொண்டோம்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி நடைப்பயிற்சி மேற்கொண்ட மைதானம் அமைந்திருக்கும் பள்ளி! அதே மைதானத்தில் 1952ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி விளையாட்டின் தந்தை மேஜர் தயான் சந்த் ஆறு நாட்களுக்கும் மேலாக விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளித்துள்ளார் என்ற புகழை தாங்கி நிற்கும் பள்ளி!
Kadambur Raju அவர்களின் தொகுதியான கோவில்பட்டியில் அமைந்துள்ள இப்பள்ளியின் மற்றுமொரு சிறப்பாக 1931ஆம் ஆண்டு அன்றைய கல்வி அமைச்சரும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவருமான திரு.குமாரசாமி ரெட்டியார்யால் திறந்துவைக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் இன்றும் செயல்பாட்டில் உள்ளது. அக்கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்வோம் என உறுதியளித்து, அதே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தையும், புத்தகக் கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.