(Source: ECI | ABP NEWS)
சாதித்த நடத்துனரின் மகள்.. ஒரே மார்க்தான் மிஸ் ஆச்சு.. திரும்பிப் பார்க்க வைத்த ஜெயங்கொண்டம் மாணவி
Ariyalur 10th Result 2025: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அரசு நடத்துனரின் மகள் 499 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.

2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றன. இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அரியலூர் மாவட்டத்தின் நிலை என்ன ?
அரியலூர் மாவட்டத்தை பொருத்தவரை 172 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 89 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்து சாதித்துள்ளன. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 9841 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் தேர்ச்சி சதவீதம் 96.38 சதவீதமாக உள்ளது. அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு அளவில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் அரசு பள்ளிகளை பொருத்தவரை 5757 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5492 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தின் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் 95.40 சதவீதமாக உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் ஆறாவது இடத்தை பிடித்து அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாதித்த நடத்துனரின் மகள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனரின் மகள், 499 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அரசு நடத்துனர் வெங்கடேசன். இவரின் மகள் சோபியா இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
இன்று தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் வெங்கடேசன் மகள் சோபியா, 499 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்றவர், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என மீதமுள்ள நான்கு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.





















