Minister Ponmudi: தொடர் புறக்கணிப்பு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்குச் செல்லாத அமைச்சர் பொன்முடி!
சென்னையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். முன்னதாக மதுரை காமராஜர் பல்கலை. மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு பொன்முடி செல்லாத நிலையில், தற்போது திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்துள்ளார்.
திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடியின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையிலும் விழாவுக்கு அவர் செல்லவில்லை.
ஆளுநர்- மாநில அரசு மோதல்
ஆளும் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுகள் செயல்படும் நிலையில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுவது அரசியலில் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இதற்கிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் கட்சியான திமுகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானமே கொண்டு வந்தார். இருந்தாலும், ஆளுநர் தொடர்ந்து சமூக நிதி, சாதியப் பாகுபாடு, திராவிட மாடல், சனாதனம் உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அதேபோல டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் டிஜிபியும் ஐபிஎஸ்ஸுமான சைலேந்திர பாபுவை நியமித்து, ஒப்புதலுக்கான கோப்பை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியது. எனினும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை
இதற்கிடையே தியாகியும் கம்யூனிஸ் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க, 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்கு கெளரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் (Senate) கூட்டத்தில் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் பட்டம் வழங்கப்படவில்லை. இதற்கு ஆளுநர் ரவி அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
புறக்கணித்த அமைச்சர் பொன்முடி
இதைத் தொடர்ந்து மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை, துணை வேந்தரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி புறக்கணித்தார். தொடர்ந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கும் அமைச்சர் பொன்முடி செல்லவில்லை. இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் இன்று (நவ. 8ஆம் தேதி) நடைபெறும் திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடியின் பெயர் இடம்பெற்றிருந்தது. எனினும் பட்டமளிப்பு விழாவுக்கு அவர் செல்லவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CAT 2023 Admit Card: எம்பிஏ கேட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?