11th Public Exam: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. முழு விவரம் இதோ..
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7 லட்சத்து 88 ஆயிரத்து 064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7 லட்சத்து 88 ஆயிரத்து 064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 7.73 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 224 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்று மொழி பாடம் தேர்வு நடைபெறுகிறது.
மார்ச் 16 - ஆங்கிலம்
மார்ச் 20 - இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 24 - உயிரியல், தாவரவியல், வரலாறு
மார்ச் 28 - வேதியல், கணக்குப்பதிவியல்
மார்ச் 30 - கணினி அறிவியல்
ஏப்ரல் 5 - கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறுகிறது.
11ஆம் வகுப்பு தேர்வு 12ஆம் வகுப்பு தேர்வை போலவே 10 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண் (regiter number/roll number), பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் 4 ஆயிரத்து 235 பேர் பறக்கும் படை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் மொபைல் அல்லது மின் சாதன பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல் ஆள்மாறாட்டம், அருகில் இருக்கும் மாணவர்களை பார்த்து தேர்வை எழுதுவது உள்ளிட்ட செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பிள்ஸ் 2 மாணவர்களுக்கு மொழித்தாள் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் வினாத்தாள் எளிதாக இருந்ததாக கூறினர். ஆனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்றும், 2 தேர்வர்கள் முறைகேடு செய்ததாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொது வெளியில் தேர்வு எழுத அனுப்பினால் அவர்களுக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பலரும் தேர்வு எழுதாமல் இருந்தனர். இதனால் கொரோனா தொற்று இருந்த போது அரசு 100 சதவீதம் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் தற்போதும் இந்த நிலை தொடர்வது வருத்தமளிக்கும் விஷயமாக கருதுகின்றனர்.
10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏப்ரல் 6 - மொழித்தாள்
ஏப்ரல் 10 - ஆங்கிலம்
ஏப்ரல் 13- கணிதம்
ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்
ஏப்ரல் 17- அறிவியல்
ஏப்ரல் 20- சமூக அறிவியல்
தேர்வு மையங்களில் மாணவர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை, இருக்கை என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வை அச்சமின்றி, டென்ஷன் இல்லாமல் அணுக வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.