TN 10th Result 2024: மயிலாடுதுறை மாவட்ட அளவில் 7 பள்ளிகளை சேர்ந்த 9 மாணவ மாணவிகள் முதலிடம்...!
10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 தனியார் பள்ளிகளை சேர்ந்த 9 மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தேர்வு எழுதிய 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10-ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 5744 மாணவர்கள், மாணவிகள் 5805 என 11,549 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 4975 மாணவர்களும், 5474 மாணவிகள் என மொத்தம் 10,449 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.61 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.30 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.48% ஆகும். இது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 86.31 சதவீதம் பெற்ற நிலையில் இந்தாண்டு 90.48 சதவீதம் எடுத்து 4.17 சதவீதம் அதிகம் ஆகும். மாநில அளவில் 27 வது இடம் பெற்றுள்ளது. 497 மதிப்பெண்கள் எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும், அரசு உயர்நிலைப் பள்ளி ஆத்தூர், மயிலாடுதுறை மாவட்ட அரசு மாதிரி பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மேல நல்லூர், அரசு மேல்நிலைப்பள்ளி வில்லியநல்லூர், அரசு உயர்நிலைப்பள்ளி சந்தரபாடி, அரசு உயர்நிலைப்பள்ளி திருவாலி, அரசு உயர்நிலைப்பள்ளி வடகரை, அரசு உயர்நிலைப்பள்ளி திட்ட்படுகை, அரசு உயர்நிலைப்பள்ளி பெருமாள் பேட்டை உள்ளிட்ட 9 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் முதலிடம் பெற்ற 7 பள்ளிகள்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளை சேர்ந்த 9 மாணவ மாணவிகள் தலா 497 மதிப்பெண்களை பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். மயிலாடுதுறை அருகே பேச்சாவடியில் உள்ள மேகனா இண்டர்நேஷனல் பள்ளி மாணவி சம்சிதா, மயிலாடுதுறை அடுத்த லட்சுமிபுரம் குட் சாமரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி
வர்ஷா ஜெய்ஸ்ரீ, சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கரி, சீர்காழியில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆண்டோ அஜிஸ், விவேகனந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காவியா, ரஞ்சனிதா, ஹமித் இர்ஃபான், திருமுல்லைவாசல் விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி ஹர்ஷினி, குத்தாலம் அடுத்த ஸ்ரீகண்டபுரம் குட்லக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அகிலாண்டேஸ்வரி ஆகியோர் 500-க்கு 497 மதிப்பெண்களை பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.