TN 10th Result 2024: தனியார் பள்ளியை பின்னுக்கு தள்ளிய அரசு பள்ளி; கரூரில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
Karur 10th Result 2024: கரூர் மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கரூரில் ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி வசதிகளுடன் தனியார் பள்ளியை பின்னுக்கு தள்ளிய அரசு பள்ளி - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை-கரூர் மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குமரன் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை 165 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 15 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
நடப்பு கல்வி ஆண்டில் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் மூன்று மாணவிகள் உட்பட 24 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதிய நிலையில், 24 பேருமே நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதன் மூலம் அரசு பள்ளி சாதனை படைத்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்கள் எளிதாக கல்வி பயிலவும், ஆர்வத்துடன் வகுப்பறையில் பங்கேற்பதற்காக ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ள இந்த பள்ளியில், 100% தேர்ச்சி அடைய தங்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவு தந்ததாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.