Tamil Nadu 10th Result 2024: 12 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி: சாதித்த தஞ்சை பார்வை திறன் குறையுடையோருக்கான பள்ளி
பிரெய்லி எழுத்து மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டது. தேர்வுகளை ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் எழுதினர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வரும் பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கின. இத்தேர்வு ஏப்.8ம் தேதி வரை நடந்தது. இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வை எழுதினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை மாணவர்கள் 14,402 பேர் எழுதினர். மாணவிகள் 14,513 பேர் எழுதினர். மொத்தம் மாணவ, மாணவிகள் 28,915 தேர்வு எழுதி இருந்தனர்.
மொத்தம் 93.40 சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் 13,032 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 13,974 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் மாணவ, மாணவிகள் 27,006 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி 90.49 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி 96.29 சதவீதமும் பெற்றனர். மொத்தம் 93.40 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
67 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு 92.16 சதவீதம் பெற்று மாநில அளவில் 17-ம் இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு இரண்டு இடம் முன்னேறி 15-ம் இடத்தை பிடித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 228 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 6,019 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். மாணவிகள் 6,380 பேர் தேர்வு எழுதியிருந்தனர். மொத்தம் 12,399 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 11,267 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.87 சதவீதம் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி
அந்த வகையில் தஞ்சாவூர் மேம்பாலம் அருகே, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் கீழ், பார்வை திறன் குறையுடையோருக்காக இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது. இப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பத்தாம் வகுப்பு தேர்வினை ஐந்து மாணவிகளும், 14 மாணவர்களும் என மொத்தம் 19 பேர் தேர்வு எழுதினர். 19 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது.
பிரெய்லி எழுத்து மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது
தொடர்ந்து இப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடதக்கது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் செ.மாணிக்கராஜ் கூறுகையில், எங்களது பள்ளியில் பார்வை திறன் குறையுடைய மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பிரெய்லி எழுத்து மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டது. தேர்வுகளை ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் எழுதினர்.
இந்தாண்டு தேர்வு எழுதிய 19 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்களது பள்ளி தொடர்ந்து 12 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது என்றார்.