Summer Holidays: கோடை விடுமுறையில் வாசிப்பு; போட்டி அறிவிப்பு- மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய அரசுப்பள்ளி!
மாணவர்களுக்கு பொதுஅறிவு நூல்கள், இலக்கிய நூல்கள், சிறுகதை, கட்டுரை, ஆய்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் ஆகியவை மாணவர்களின் படிக்கும் வகுப்பு மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டன.

கோடை வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி அரசுப் பள்ளி ஒன்று அசத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிப்பதற்காக புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.வெற்றிவேலன் தலைமை வகித்தார்.
என்னென்ன நூல்கள்?
மாணவர்களுக்கு பொது அறிவு நூல்கள், இலக்கிய நூல்கள், சிறுகதை, கட்டுரை, ஆய்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் ஆகியவை மாணவர்களின் படிக்கும் வகுப்பு மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டன.
விமர்சனம் எழுதும் போட்டி
இதுகுறித்து பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் சூரியகுமார் கூறும்போது, ’’ஒரு மாதம் மாணவர்கள் கோடை விடுமுறையில் செல்ல இருக்கிறார்கள். இந்தக் கோடை விடுமுறையில் வாசிப்பதற்காக அவர்களுக்கு பயனுள்ள புத்தகங்களை வழங்கி இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் தாங்கள் படித்த புத்தகங்கள் குறித்து பத்து பக்க அளவில் விமர்சனம் எழுதும் போட்டியும் அறிவித்திருக்கிறோம்.
மாணவர்கள் தங்கள் விருப்பமான புத்தகங்களை தேர்வு செய்து எடுத்துச் சென்றுள்ளார்கள். இது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு மிகவும் உதவும். கவிதை எழுதக்கூடிய மாணவர்கள் எது மாதிரியான கவிதைகளை எழுத வேண்டும் என்பதை புரிந்து கொள்வார்கள். அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அறிவியல் புத்தகங்களை படிக்கும் பொழுது தங்களது அறிவியல் அறிவை மேம்படுத்தி கொள்வார்கள்.
கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கலாம்
புத்தகங்களை வாசிக்கும் பொழுது கவனமாக தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். புத்தகங்கள் வாழ்வின் திசையை மாற்றக் கூடிய சக்தி படைத்தவை. மேலும் புத்தகங்கள் நமது கற்பனைத் திறனை மேம்படுத்தி நமது இயக்கத்தை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவை. கோடை வாசிப்புக்கு வழங்கப்பட்டுள்ள நூல்களால் மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.

