மாணவர்களே! தள்ளிப்போடும் பழக்கத்தை மாற்ற வேண்டுமா? இதோ, வெற்றி தரும் ரகசிய வழிகள்!
முதல் படி எப்போதும் கடினமானது. ஆனால் அதை நீங்கள் எடுத்து வைத்தவுடன், மீதமுள்ளவை எளிதாகிவிடும்.

ஒரு விஷயத்தைத் தள்ளிப் போடுவது என்பது ஒவ்வொரு மாணவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை ஆகும். படிக்கும் பணி முடிவில்லாததாகவோ அல்லது கடினமானதாகவோ தோன்றும்போது. ’’இதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்’’ என்று நினைக்கத் தொடங்குகின்றனர்.
ஆனால் பிறகு என்பது அரிதாகவே வருகிறது. படிக்கும்போது தள்ளிப்போவது என்பது, செய்யாமல் இருப்பதற்கான திறவுகோல், நீங்கள் ஏன் தாமதப்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
பணிகளை சிறிய இலக்குகளாகப் பிரியுங்கள்
உங்கள் தாமதத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் அதிக படிப்பினால் திணறுகிறீர்களா, தோற்று விடுவோம் என்று பயப்படுகிறீர்களா, அல்லது வெறுமனே கவனச்சிதறல்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? என்று யோசியுங்கள்.
காரணத்தை அறிந்தவுடன், செயல்படுவது எளிதாக இருக்கும். உங்கள் படிப்புப் பகுதிகளை சிறிய, நிர்வகிக்கக்கூடிய பகுதிகளாகப் பிரிக்கவும். ஒரு முழு அத்தியாயத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, சில பக்கங்கள் அல்லது ஒரு தலைப்பை ஒரு நேரத்தில் முடிக்க இலக்கு வைக்கவும். இது உங்களுக்கு பாசிட்டிவ் உணர்வைத் தரும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
பொமோடோரோ நுட்பம்
மற்றொரு பயனுள்ள முறை இது. தொடர்ச்சியாக 25 நிமிடங்கள் படியுங்கள், பிறகு 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு சுற்றுகளுக்குப் பிறகு, 15- 30 நிமிடங்கள் நீண்ட ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறை உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது மற்றும் சோர்வைத் தடுக்கிறது.
கவனச்சிதறல்களை அகற்றவும்
கவனச்சிதறல் இல்லாத சூழலை உருவாக்க உங்கள் தொலைபேசியை ஒதுக்கி வையுங்கள். தேவையற்ற அறிவிப்புகளை ஆஃப் செய்து வைக்கவும், மேலும் உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ நீங்கள் படிக்கும் நேரத்தைத் தெரிவிக்கவும். சுத்தமான, ஒழுங்கமைக்கப்பட்ட மேசையும் கவனத்தை மேம்படுத்தும்.
நமக்கு நாமே… உங்கள் முன்னேற்றத்திற்கு பரிசு அளியுங்கள்
பணிகளை முடித்ததற்கு உங்களை நீங்களே பரிசு அளித்துக் கொள்ளுங்கள் - அது ஒரு குறுகிய பயணமாக இருக்கலாம். ஒரு சிற்றுண்டி அல்லது ஓர் இனிப்பு அல்லது உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தைப் பார்ப்பது போன்றதாக இருக்கலாம். நேர்மறையான ஊக்கம், படிப்பதை ஒரு சுமையாக உணர விடாமல் செய்யும்.
நிலைத்தன்மை (Consistency)
கடைசியாக, பர்ஃபெக்ஷனை விட முன்னேற்றமே முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குறுகிய நேரம் படித்தாலும், அது நிலைத்தன்மையை உருவாக்கும். தொடர்ச்சியான இந்தப் பண்புதான் தாமதிப்பவர்களை சாதிப்பவர்களாக மாற்றுகிறது.
முதல் படி எப்போதும் கடினமானது. ஆனால் அதை நீங்கள் எடுத்தவுடன், மீதமுள்ளவை எளிதாகிவிடும்.
இந்த பழக்கவழக்கங்களைப் பயன்படுத்துவதன் மூலம், படிப்பு குறைவான மன அழுத்தத்தைக் கொண்டதாகவும், நிர்வகிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
நீங்கள் தொடங்க முடிவு செய்யும் தருணத்தில் முன்னேற்றம் தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அந்த முதல் படியை, இன்றே.. நன்றே எடுத்து வையுங்கள்.























