Rs 1000 for School Students: மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000: திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!
மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்க வகை செய்யும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்க வகை செய்யும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாதாமாதம் ரூ.1000
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், 2023- 2024 ஆம் கல்வியாண்டு முதல் "தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு" நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வில் 1000 மாணவர்கள்தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவர். குறிப்பாக உதவித் தொகையாக ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.10,000 (மாதம் ரூ.1000, வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும். இதற்கு ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம வர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கும் வழங்கிய அறிவுறுத்தலில், "செப்டம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் பயிலும் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலாக விண்ணப்ப படிவத்தினை நாளை (18.08.2023) வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 18.08.2023-ற்குள் மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவியர் இத்தேர்விற்கு விண்ணப்பித்திட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். தேர்வு தொடர்பான அறிவிப்பினை மாணவர்கள் அறியும் வண்ணம் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் ஒட்டவும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பித்திட ஊக்குவித்திடவும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1691395473.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு குறித்து விரிவாக அறிய: https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1690884982.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.