UPSC New Chairman: சர்ச்சைகளில் சிக்கிய யுபிஎஸ்சி; புதிய தலைவர் நியமனம்; யார் இந்த ப்ரீத்தி சுதன்?
UPSC New Chairman Preeti Sudan: ஏற்கெனவே தலைவராக இருந்த மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்த நிலையில், சுகாதாரத் துறை முன்னாள் செயலாளராக இருந்த ப்ரீத்தி சுதன் யுபிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யுபிஎஸ்சி எனப்படும் இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன்(Preeti Sudan) நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே தலைவராக இருந்த மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்த நிலையில், சுகாதாரத் துறை முன்னாள் செயலாளராக இருந்த ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீட், க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைக் கிளப்பிய அதே வேளையில், யுபிஎஸ்சி வட்டாரத்திலும் புயல் கிளம்பியது. அதற்குக் காரணம் பூஜா கேத்கர் என்னும் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி. இவர் தன்னுடைய சாதி, பெற்றோர், பார்வைத் திறன் ஆகியவற்றில் போலியாக ஆவணங்களை மாற்றி, பணியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் மோசடி செய்து, பணியில் சேர்ந்ததாகப் புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கெனவே தலைவராக இருந்த மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்த நிலையில், சுகாதாரத் துறை முன்னாள் செயலாளராக இருந்த ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இவர்? பார்க்கலாம்.
37 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1983 பேட்ச் அதிகாரி ப்ரீத்தி சுதன். இவர், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் சுமார் 37 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் ப்ரீத்திக்கு உண்டு.
மத்திய சுகாதாரத் துறை செயலாளராக இருந்த 3 ஆண்டுகளில், கடைசி 6 மாதங்கள் கொரோனா பெருந்தொற்றைக் கையாண்டார் ப்ரீத்தி.
ப்ரீத்தியின் நியமனம் குறித்து யுபிஎஸ்சி இணையதளத்தில் கூறும்போது, ''யுபிஎஸ்சி தலைவர் முன்னதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளராக இருந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை, பாதுகாப்புத் துறைகளிலும் ப்ரீத்தி பணியாற்றி உள்ளார்.
1983 batch IAS officer Preeti Sudan will be the new UPSC Chairperson, with effect from 1st August 2024. pic.twitter.com/t6Ylfr4BOP
— ANI (@ANI) July 31, 2024
தேசிய அளவிலான திட்டங்களில் குறிப்பிடத்தக்க பல பங்களிப்பு
மாநில நிர்வாகத்தில் பணியாற்றும்போது, நிதி மற்றும் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை, சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவற்றைக் கையாண்டார். அவள் பொருளாதாரத்தில் எம்.பில். பட்டமும், சமூகக் கொள்கை மற்றும் திட்டமிடலில் எம்.எஸ்சி. பட்டத்தையும் முடித்திருக்கிறார். பல்வேறு தேசிய அளவிலான திட்டங்களில் குறிப்பிடத்தக்க பல பங்களிப்புகளை ப்ரீத்தி செய்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.