Exam Schedule: நீட், ஜேஇஇ, க்யூட் நுழைவுத் தேர்வு தேதிகளில் மாற்றமா?- மத்திய அரசு அறிவிப்பு
JEE Main, NEET UG, CUET 2024 exam schedule: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளான நீட், ஜேஇஇ, க்யூட் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளான நீட், ஜேஇஇ, க்யூட் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதிகள்
இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நான்காம் கட்டத் தேர்தல் மே 13, 5ஆம் கட்டத் தேர்தல் மே 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல 6ஆவது கட்டத் தேர்தல் மே 26ஆம் தேதியும் கடைசியாக 7ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் நடைபெறும் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்குமா என்று எழுந்துள்ளது. இதை அடுத்து நீட், ஜேஇஇ, க்யூட் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேர்வு தேதிகள் மாறுமா?
க்யூட் இளங்கலைத் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், ’’ஏற்கெனவே திட்டமிட்ட அட்டவணைப்படி மே 15 முதல் 31ஆம் தேதி வரை இளநிலைப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணையைக் கொண்டு தேர்வு தேதிகள் மாறாது.
இதில் மே 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தேர்வுகளுடன் தேர்தலும் நடத்தப்பட உள்ளன. மார்ச் 26ஆம் தேதியுடன் இளநிலை க்யூட் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு முடிவடைகிறது. அதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் அவர்களின் இருப்பிடம் ஆகிய தகவல்களை அடிப்படையாக வைத்து, தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
நீட், ஜேஇஇ தேர்வு தேதிகளில் மாற்றமா?
அதேபோல மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ ஆகிய தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த தேசியத் தேர்வுகள் முகமை அதிகாரிகள், ''பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தன. எனினும் காரணங்கள் குறிப்பிடாமல் தேர்வுகள், ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டன.
அதேபோல நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுக்கு நேற்றுடன் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்தத் தேதியிலும் மாற்றம் ஏற்படாது'' என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
பள்ளி தேர்வுகளில் மாற்றம்
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12ஆம்தேதி வரை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.