NEET UG Result 2024:நீட் மதிப்பெண் குளறுபடிகள்: லட்சக்கணக்கான மாணவர் குரலுக்கு செவிசாய்க்க மறுப்பது ஏன்?- எழும் கேள்விகள்!
தேர்வு முகமைக்கு மனு அனுப்பியவர்களுக்கும், நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கும் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்குவது நியாயமும் அல்ல
நீட் மதிப்பெண் குளறுபடிகள் வெளிவருவதை அடுத்து, அரசு செவிசாய்க்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பயனற்ற நீட் நுழைவுத்தேர்வுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ’’முதலில் நீட் வினாத்தாள் கசிந்தது. இப்போது தேர்வு முடிவுகளிலும் முறைகேடு என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளது மற்றும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நிறைய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நிகழ்ந்துள்ளது. இவை அனைத்தும் அதிர்ச்சியை அளிக்கின்றன. ஏன் அரசு லட்சக்கணக்கான மாணவர்களின் குரலுக்கு செவிசாய்க்க மறுக்கிறது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைப்பு
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றவில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு யாருக்கும் பயனளிக்காத நீட் நுழைவுத்தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற வாதங்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
கடந்த காலங்களில் அதிக அளவாக 2021ஆம் ஆண்டில் மூவரும், 2020ஆம் ஆண்டில் இருவரும், 2023ஆம் ஆண்டில் ஒருவரும் முழு மதிப்பெண்களை பெற்றிருந்தனர். ஆனால், இம்முறை 67 பேர், அதிலும் ஒரு கேள்விக்கு தவறான விடையளித்து மைனஸ் மதிப்பெண் பெற்ற 44 பேரும் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பது வியப்பையும், நீட் மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.
தன்னிச்சையாக கருணை மதிப்பெண்
தேர்வுகளை நடத்துவதில் ஏதேனும் குளறுபடிகள் நடந்து, அதற்காக கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக இருந்தால், எதற்காக கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன? எந்த அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன? யாருக்கெல்லாம் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்? என்பது குறித்த பொது அறிவிப்பை தேர்வு முகமை வெளியிட வேண்டும். அதுதொடர்பான மாணவர்களின் கருத்துகளை அறிந்த பிறகுதான் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையும் பின்பற்றாத தேர்வு முகமை தன்னிச்சையாக கருணை மதிப்பெண்களை வழங்கியிருக்கிறது.
நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நேர இழப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நேர இழப்புக்கான கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. தேர்வு முகமைக்கு மனு அனுப்பியவர்களுக்கும், நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கும் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்குவது நியாயமும் அல்ல, சமூகநீதியும் அல்ல. தேர்வு முகமை பின்பற்றிய இந்த பிழையான நடைமுறையால் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.
அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுவதா?
எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதிகாண் மதிப்பெண் 50 மதிப்பெண்கள் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 570க்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் தரப்பில் கூறப்படும் செய்திகள் கவலையளிக்கின்றன. தேசிய தேர்வு முகமை செய்த தவறுக்காக அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.